Enable Javscript for better performance
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அனைத்துக் குளம், குட்டைகளைச் சேர்க்க விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அனைத்துக் குளம், குட்டைகளைச் சேர்க்க விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th April 2017 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தற்போது அரசு அறிவித்துள்ள அத்திக்கடவு - அவிநாசித் திட்டத்தில் மேட்டுப்பாளையம் தாலுகா பகுதி விவசாயிகள் பயன்பெறும்வ கையில் தாலுகாவில் உள்ள அனைத்துக் குளம், குட்டைகளையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் குளம், குட்டைகளை நிரப்புதல், திறந்தவெளி கால்வாய் மூலமாக நீர் செறிவூட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் காரமடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்துக்கு பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புக்குழுத் தலைவர் டி.டி.அரங்கசாமி தலைமை வகித்தார். காரமடையைச் சேர்ந்த எம்.கே.கே.மோகன், விவசாயிகள் சி.என்.ராஜேந்திரன், சாம்ராஜ், பொறியாளர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரமடை பொறியாளர் நடராஜன் வரவேற்றார்.
    இக்கூட்டத்தில் நதிநீர்ப் பாதுகாப்புக்குழுத் தலைவர் டி.டி.அரங்கசாமி பேசியதாவது:
    இந்த நிதி ஆண்டில் நிறைவேற்றப்படும் என அரசு அறிவித்துள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் மூலமாகத் தற்போது மேட்டுப்பாளையம் தாலுகாவில் மூடுதுறை ஊராட்சியில் இரண்டு குட்டைகள் மட்டும் பயன்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்து. மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கு உள்பட்ட அத்திக்கடவிலிருந்து தொடங்கும் இத்திட்டத்தில் இந்தத் தாலுகா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே, இத்திட்டம் செயலாக்கத்துக்கு வரும்போது மேட்டுப்பாளையம் தாலுகாவின்  அனைத்து ஊராட்சிகளுக்கும் உள்பட்ட குளம், குட்டைகளிலும் நீர்நிரப்ப வழிவகை செய்வதுடன், இத்திட்டத்தை திறந்தவெளிக் கால்வாய் மூலமாகக் கொண்டு சென்று நீர் செறிவூட்ட வேண்டும் என்றார்.
    தொடர்ந்து நடைபெற்ற மேட்டுப்பாளையம் தாலுகா அத்திக்கடவு - அவிநாசித் திட்ட செயலாக்க குழுவுக்கான நிர்வாகிகள் தேர்வில் தலைவராகப் பொறியாளர் நடராஜன், செயலராக முன்னாள் நூலகர் முத்துசாமி, பொருளாளராக வைடூரியம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேந்தெடுக்கப்பட்டனர்.
    இக்கூட்டத்தில் காரமடை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சிறுமுகை, பள்ளேபாளையம், இரும்பறை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். அத்திக்கடவு - அவிநாசித் திட்ட செயலாக்க குழுவின் கே.சுந்தரம் நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai