Enable Javscript for better performance
மதுக் கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்: ஆட்சியர் அலுவலம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்: ஆட்சியர் அலுவலம் முற்றுகை

    By DIN  |   Published on : 18th April 2017 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தில் புதிதாக மதுக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கோவை மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்கு உள்ள 154 மதுக் கடைகள் அண்மையில் அகற்றப்பட்டன.
    இவ்வாறு அகற்றப்பட்ட மதுக் கடைகளைத் திறக்க புதிய இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பல கடைகள் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, புதிய மதுக் கடைகள் அமைப்பதற்கு எதிராக பொதுமக்கள் அதிக அளவில் மனு அளித்தனர். இதில், சூலூரை அடுத்த கணியூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதியில் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், காரமடை அருகே தாளம்பாளையம், பக்கி சாலை காலனி ஆகிய பகுதிகளில் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
    கோவை பீளமேடு, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சிட்ரா ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளர் காலனி பிரபு தலைமையில் அக்கட்சியினர் மது பாட்டில்களை மாலையாக போட்டபடி, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர், சாலைகளில் மதுவை ஊற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள், ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் படுத்து ஒப்பாரி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிச்சி, எம்.ஜி.ஆர்.நகர், கே.வி.கே.நகர், காமராஜ் நகர், மயிலேறிபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் மதுக் கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    மாதர் சங்கத்தினர் போராட்டம்...:கோவை,வேடபட்டி சாலை, நாகராஜபுரத்தில் குடியிருப்புகளுக்கு அருகே மதுக் கடை செயல்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், காந்தி பார்க், சொக்கம்புதூர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நாகராஜ
    புரம் பகுதியில் காலை முதலே குவியத் துவங்குகின்றனர்.
    இதனால், அப்பகுதி பெண்கள் பாதையைக் கடக்கவே முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இக்கடையை மூடக் கோரி, மாதர் சங்கத்தினர் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் மதுக் கடைக்கு முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் மண்டல துணை மேலாளர் பரிதா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விரைவில் இக்கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    பொள்ளாச்சியில்...: பொள்ளாச்சியை அடுத்த ஊத்துக்காடு சாலை அருகே ஏ.பி.எஸ் நகர், வெள்ளாளபாளையம் பகுதியில் அமையவுள்ள மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமுமுக, பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    வழித் தடத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராகப் புகார்: சூலூரை பீடம்பள்ளி கிராமத்தில் விவசாய நிலத்துக்குச் செல்ல அம்மன் கோயில் அருகே 25 அடி அகலத்துக்கு வழித் தடம் உள்ளது. இந்த வழித் தடம் தனியார் நூற்பாலை, கோயிலுக்குச் செல்லும் சாலையாக உள்ளது. இந்த வழித் தடத்தில் குடிநீர் இணைப்புகளும் உள்ளன.
    இந்நிலையில், வழித் தடத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமித்து கம்பி வேலியிட்டு மறித்துள்ளனர். எனவே, விவசாயிகள் செல்லும் பாதையை மறித்து ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
    வரதட்சிணை புகார்: சூலூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா (27) என்பவர் அளித்த மனு:
    பொள்ளாச்சியைச் சேர்ந்த மோகன் என்பரைக் காதலித்து 2011-இல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு நான்கரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மோகனின் தாய் ரூ. 5 லட்சம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்துவதோடு, பணம் கொடுக்கவில்லை என்றால் எனது கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்து விடுவதாக மிரட்டி வருகிறார்.
    மேலும், எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளார். இதுகுறித்து கேட்டால் என்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai