Enable Javscript for better performance
பொதுப் பணித் துறையினர் தாக்கப்பட்ட வழக்கு: தமிழக-கேரள அதிகாரிகள்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்ப- Dinamani

சுடச்சுட

    

    பொதுப் பணித் துறையினர் தாக்கப்பட்ட வழக்கு: தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

    By DIN  |   Published on : 19th April 2017 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரம்பிக்குளத்தில் கேரள போலீஸாரால் தமிழகப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக இருமாநில அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
    பிஏபி திட்டத்திலுள்ள பரம்பிக்குளம் பகுதியில் வசிக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தமிழகப் பொதுப் பணித் துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த சிற்றுந்துக்கு பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் அஞ்சன்குமார் தடை விதித்தார். இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் கேரள வனத் துறையைக் கண்டித்து பரம்பிக்குளம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அப்போது, அங்கு வந்த கேரள போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள், பொதுமக்களைத் தாக்கினர்.
    மேலும், மாவட்ட வன அலுவலர் அஞ்சன்குமார் கொடுத்த புகாரின்பேரில், தமிழகப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது பரம்பிக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    இந்நிலையில், இருமாநிலத்துக்கும் சுமூக உடன்பாடு எட்டும் வகையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி தலைமையில் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இந்தப் பிரச்னையை முடித்துக் கொள்ளலாம் என பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் அஞ்சன்குமார் தெரிவித்துச் சென்றார்.
    ஆனால், தமிழக அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட 42 பேருக்கு 6 மாதம் கழித்து மார்ச் மாத இறுதியில் பரம்பிக்குளம் போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீஸில் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக அழைக்கும் போதெல்லாம் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இதையடுத்து, இருமாநில அதிகாரிகளை வைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த ஏப்ரல் 12-ஆம் தேதி, சார் ஆட்சியர் காயத்ரி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், மாவட்ட வன அலுவலர் அஞ்சன்குமார் வராததால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதையடுத்து, இருமாநில அதிகாரிகள் மட்டத்தில் சார் ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    இதில், பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் அஞ்சன்குமார், ஆலந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகமது காசிம், தமிழகப் பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் லோகநாதன், உதவி செயற்பொறியாளர் கருணாகரன், உதவிப் பொறியாளர் தியாகராஜன், வால்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ், பொள்ளாச்சி மாவட்ட வன அலுவலர் சுப்பையா, வட்டாட்சியர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக அதிகாரிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப்  பெற வேண்டும் என கேரள அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
    தமிழக அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தந்தால், அதை கேரள அரசுக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட வன அலுவலர் அஞ்சன்குமார் தெரிவித்தார். அதற்கு, தமிழகப் பொதுப் பணித் துறை உயரதிகாரிகளிடம் ஆலோசித்து விட்டு கடிதம் தருவது குறித்து முடிவு செய்யமுடியும் என தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், இந்தக் கூட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai