மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published on : 19th April 2017 08:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு நகரக் குழு வலியுறுத்தியுள்ளது.
கோவை பூ மார்க்கெட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மேற்கு நகரச் செயலாளர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கவும், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
கோவை மாநகர்ப் பகுதிகளில் அரசு, தனியார் துறை சார்ந்த பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளது. அவ்வாறு தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இச்சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகள் மீது வெள்ளை வண்ணம் பூச போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர்ப் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நிறைவடையாத நிலையில், சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கு கட்டணம் செலுத்த தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் அச்சுறுத்தும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மேற்கு நகரக் குழு புதிய நிர்வாகிகளாக செயலாளர் ஜேம்ஸ், துணைச் செயலாளர்கள் சந்திரன், ஜீவா, பொருளாளர் மோகன், செயற்குழு உறுப்பினர்களாக சி.தங்கவேல், ராஜேந்திரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.