Enable Javscript for better performance
காலத்தால் அழியாத சாசனங்கள்! தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்- Dinamani

சுடச்சுட

  

  காலத்தால் அழியாத சாசனங்கள்! தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

  By DIN  |   Published on : 20th April 2017 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "இலக்கிய முன்னோடிகள் குறித்து வைரமுத்து எழுதும் கட்டுரைகள் காலத்தால் அழியாத சாசனங்கள்' என்றார் "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
  "இலக்கிய முன்னோடிகள் வரிசையில்..." என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து "தினமணி' நாளிதழில் கட்டுரை எழுதி வருகிறார். அக்கட்டுரையை பொதுநிகழ்ச்சியில் அரங்கேற்றும் வகையில் தினமணி சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  
  அந்த வகையில், வள்ளலார் பற்றி "வெள்ளை வெளிச்சம்' என்ற தலைப்பிலான கட்டுரை, கோவையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
  இந்த நிகழ்ச்சியில் "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது:
  "வெள்ளை வெளிச்சம்' கட்டுரையின் மூலம் தமிழகத்தில் வள்ளலார் குறித்த எழுச்சியை மீண்டும் உருவாக்கி, கவிஞர் வைரமுத்து புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார். அரசியல்வாதியாகவும் இருந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், அருட்செல்வர் நா.மகாலிங்கம், கிரிதாரி பிரசாத், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி., ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் வள்ளலாரின் கொள்கைகளைத் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பினர். ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக  எங்கேயோ ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. வள்ளலார் குறித்து இளம்பருவத்தில் நான் கண்ட எழுச்சி தற்போது இல்லை என்கிற வேதனை எனக்கு உண்டு.
  தவத்திரு குன்றக்குடி அடிகளார் (பெரியவர்) ஆண்டுதோறும் வள்ளுவருக்கு விழா எடுக்கும் வகையில் மாநாடு நடத்துவார். அப்போது இருந்த எழுச்சி இப்போது இல்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அந்த வருத்தத்தைத் தீர்த்து வைக்கத்தான் மதுரையில் வைரமுத்துவைக் கொண்டு வள்ளுவர் பற்றிய கட்டுரையை அரங்கேற்றி எழுச்சியை ஏற்படுத்தினோம். இப்போது, "வெள்ளை வெளிச்சம்' கட்டுரையைக் கோவையில் அரங்கேற்றுவதன் மூலம் வள்ளலார் குறித்த எழுச்சிக்குத் தொடக்கம் ஏற்படுத்தி இருக்கிறோம்.
  தமிழுக்கும், தமிழர்களுக்கும் இன்றைய தேவை வள்ளுவரும், வள்ளலாரும்தான். நமது குழந்தைகள் தமிழ் படிக்கத் தடுமாறுகின்றார்கள். ஒழுக்க நெறியில் தவறுகிறார்கள் என்று பெற்றோர் கவலைப்படுகின்றனர். வள்ளுவப் பேராசானையும், வள்ளலாரையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திவிட்டால், தமிழும், தமிழ் இனமும் காலத்துக்கும் அழியாது.
  மெட்டுக்கு ஏற்ப வார்த்தைகள் போடுவதுதான் பாடலாசிரியர்களின் அடிப்படைத் திறமை. ஆனால், அதிலும்கூட இலக்கியத்தைக் கலக்க முடியுமா, காலத்தைக் கடந்து நிற்கும் இலக்கிய உவமைகளைப் புகுத்த முடியுமா என்று யோசிப்பவர் வைரமுத்து. திரைப்படப் பாடல்களில் இலக்கியத்தைப் புகுத்திய பெருமைக்குரியவர்.
  தமிழனுக்குக் கிடைக்க வேண்டிய பெருமை ஞானபீட விருது. இதுவரை தமிழருக்கு இரண்டு முறை மட்டுமே இவ்விருது கிடைத்துள்ளது. திரைப்படப் பாடல்களுக்காக 7 முறை தேசிய விருது பெற்ற வைரமுத்து, தமிழுக்கு ஞானபீட விருதைப் பெற்றுத் தர வேண்டும். பெருமை சேர்க்க வேண்டும் என்பது இந்த மாமன்றத்தின் விருப்பம்.தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், "வெள்ளை வெளிச்சம்' என்னும் வள்ளலார் பற்றிய இக்கட்டுரையைப் பள்ளிக்கூடப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மாணவ, மாணவியரிடம் வள்ளலார் குறித்த மிகப் பெரிய தாக்கம் ஏற்படும்.
  இலக்கிய முன்னோடிகள் வரிசையில் பாரதியார், வள்ளுவர், கம்பர், வள்ளலார் உள்ளிட்டோர் பற்றிய வைரமுத்துவின் பதிவுகள் வெறும் கட்டுரைகள் அல்ல. என்றென்றும் நிலைபெறப் போகும் சாசனங்கள். அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாக வெளியிடும்போது இது முத்துச்சரமாகத் திகழ்ந்து, தமிழுக்கும், தமிழர்களுக்கும் காலாகாலத்துக்கும் பொக்கிஷமாக இருக்கும் என்றார் தினமணி ஆசிரியர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai