Enable Javscript for better performance
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: இணையம் வழியாக இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: இணையம் வழியாக இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 20th April 2017 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஏப்ரல் 20 (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித் துறை, இதுதொடர்பான அறிவிப்பை தகவல் பலகையில் வெளியிடும்படி, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
    இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) (சி)-இன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை (எல்.கே.ஜி. அல்லது 1-ஆம் வகுப்பு) வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
    அதன்படி, 2017-18-ஆம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் தங்களது தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும். இணைய வழியாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர் விவரம், நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை அதற்கான காரணங்களுடன் மே 22-ஆம் தேதி தகவல் பலகையில் வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு மேலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் பெற்றோர்களின் முன்னிலையில் மே 23-ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
    தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல், விண்ணப்ப எண் ஆகியவற்றை ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் கொண்ட காத்திருப்போர் பட்டியலுடன் 24-ஆம் தேதி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
    மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். அரசு இ-சேவை மையங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் பெற்றோர்கள் உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.
    கோவை மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி நர்சரி, தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் மேற்கொண்ட சேர்க்கை தொடர்பாக பள்ளி வாரியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை விவரத்தை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
    அரசின் இந்தத் திட்டம் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, பள்ளியின் பெயர்ப் பலகைக்கு அருகே நன்கு தெரியும் வகையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும்.
    மாணவர் சேர்க்கையின்போது, கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. சேர்க்கை கோரும், மாணவரின் இருப்பிடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் இருந்தாலும் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளியில் சட்டப்படி, மாணவர் சேர்க்கையை மறுக்காமல் நடத்த வேண்டும்.
    இந்த வாய்ப்பை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai