Enable Javscript for better performance
செல்லாக் காசாக மாறுகிறதா 10 ரூபாய் நாணயங்கள்? வர்த்தக நிறுவனங்கள், பேருந்துகளில் வாங்க மறுப்பதாகப் ப- Dinamani

சுடச்சுட

    

    செல்லாக் காசாக மாறுகிறதா 10 ரூபாய் நாணயங்கள்? வர்த்தக நிறுவனங்கள், பேருந்துகளில் வாங்க மறுப்பதாகப் புகார்

    By DIN  |   Published on : 21st April 2017 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் 10 ரூபாய் நாணயங்களை வர்த்தக நிறுவனங்கள், அரசு, தனியார் பேருந்துகளில் வாங்க மறுப்பதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.   
    கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் பிறகு, சில மாதங்களில் புதிதாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு புழக்கத்தில் வந்தவுடன் பணத் தட்டுப்பாடு ஓரளவு நீங்கியது.
    இந்நிலையில், புதிய பிரச்னையாக 10 ரூபாய் நாணயங்களில் அதிக அளவு போலி நாணயங்கள் புழங்குவதாக வதந்தி பரவியது. இதனால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களைக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடுக்கும்போது அவற்றை சிலர் வாங்க மறுக்கின்றனர்.
    அரசு, தனியார் பேருந்துகளில் பயணம் செய்வோர் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களையும் நடத்துநர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    இதுகுறித்து இருகூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மோகன் கூறியதாவது:
    என்னிடம் ரூ. 3 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் இருந்தன. இந்த நாணயங்களைக் கொடுத்து பணமாக மாற்ற முயன்றபோது, அவிநாசி சாலை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள இரு வங்கிகளில் வாங்க மறுத்து விட்டனர். நான் கணக்கு வைத்துள்ள வங்கியில் சிறுகச் சிறுக கொடுத்து அந்த நாணயங்களை மாற்றினேன்.
    கோவையில் உள்ள சிறு, நடுத்தர வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் விடுதிகள், பால் விற்பனை நிலையம் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் இடங்களில் கொடுத்தாலும் ஒரு சிலர் வாங்குவதில்லை என்றார்.
    கமிஷனுடன் மாற்றித் தரும் வங்கி ஊழியர்கள்:
    கோவை மாநகரில் உள்ள பெரும்பாலான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் மொத்தமாக நாணயங்களை மாற்றச் செல்லும் நபர்களிடம் 100 ரூபாய்க்கு 5 ரூபாய் கமிஷனுடன் மாற்றித் தருவதாக அங்குள்ள ஊழியர்களே வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். இதனால், பொதுமக்கள் கமிஷன் தொகையைக் கொடுத்து நாணயங்களை மாற்றி வருகின்றனர். சட்டத்துக்குப் புறம்பாக கமிஷனுக்கு மாற்றித் தரும் நபர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
    இந்த அறிவிப்புக்குப் பிறகும் வியாபார நிறுவனங்கள், பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.
    வங்கி அதிகாரி மறுப்பு: இதுகுறித்து கோவை பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைக் கிளை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களைச் செல்லாது என்பது ஒரு சிலர் கிளப்பிவிடும் வதந்தியாகும். எங்களது வங்கியில் வாடிக்கையாளர்களிடமிருந்து 10 ரூபாய் நாணயங்களை வங்கிக் கொள்கிறோம். அதேபோல், வாடிக்கையாளர்களுக்கும் நாணயங்கள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் இதில் அச்சப்படத் தேவையில்லை. அவ்வாறு வாங்க மறுக்கும் நபர்கள் மீது அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai