மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
By DIN | Published on : 21st April 2017 07:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபரின் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 94 முதல் 100 வார்டு வரையில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின்போது குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி அதிக அளவில் குடிநீர் எடுக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுக்க வேண்டாம் என இணைப்புதாரர்களிடம் பலமுறை எச்சரித்தும் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே, குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். எனவே, குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.