Enable Javscript for better performance
இரு பெண்கள் கொலை: தாய்,  மகனுக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் முன்பு பூச்சிக் கொல்லி மருந்து கொடுத்து இரு பெண்களைக் கொலை செய்த வழக்கில் தாய், மகன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
     கோவை, கவுண்டம்பாளையம் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பழனியம்மாள் (45). இந்தத் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகனான ரமேஷுக்கும்(26), உடையாம்பாளையத்தைச் சேர்ந்த பழனியம்மாளின் அக்காள் அய்யம்மாளின் பேத்திக்கும் சில ஆண்டுகளுக்கும் முன்னர் திருமணம் நடைபெற்றது.
     இதனிடையே, லேத் வேலைக்குச் சென்று வந்த ரமேஷுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதனால், சரிவர பணிக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்ததாராம். மேலும், பலரிடம் கடன் வாங்கி, அதை சரிவரத் திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் அய்யம்மாளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
     இந்நிலையில், 2014 அக்டோபர் 13-ஆம் தேதி பழனியம்மாளும், ரமேஷும் உடையாம்பாளையத்தில் உள்ள அய்யம்மாளின் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது, அய்யம்மாளின் உறவினரான எஸ்தர் உடனிருந்துள்ளார். அப்போது, அய்யம்மாள் தனக்கு மூட்டு வலிப்பதாகவும், மருந்து வாங்கி வருமாறும் ரமேஷிடம் தெரிவித்துள்ளார். கடைக்குச் சென்ற ரமேஷ், அய்யம்மாள் பணம் தராத ஆத்திரத்தில் தென்னை மரத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி வந்துள்ளார்.
     அந்த பூச்சிக் கொல்லி மருந்தை குளிர்பானத்தில் கலந்து அய்யம்மாளுக்கு கொடுத்துள்ளார். அங்கிருந்த எஸ்தர், மூட்டு வலி மருந்து என நினைத்து பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். சிறிது நேரத்திலேயே அவர்கள் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவர்கள் அணிந்த 4 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம், செல்லிடப்பேசி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ரமேஷும், பழனியம்மாளும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
     இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பழனியம்மாள், ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி எம்.கிறிஸ்டோபர் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம்சாட்டப்பட்ட பழனியம்மாள், ரமேஷ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai