Enable Javscript for better performance
பள்ளத்தில் விழுந்த இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்காபாளையம் அருகே புறவழிச் சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
     பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்காபாளையம் பிரிவில் இருந்து திப்பம்பட்டி வரை புறவழிச்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த டேனியல் கிங்(22) இருசக்கர வாகனத்தில் குள்ளக்காபாளையம் பிரிவில் இருந்து அவரது ஊருக்குச் சென்றுள்ளார். அப்போது, பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     இவர், தனியார் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. புறவழிச்சாலைப் பணி நடைபெறும் இடங்களிலும், பாலங்கள் கட்டப்படும் இடங்களிலும் "பணி நடைபெறுகிறது' என்பதற்கான எச்சரிக்கைப் பலகை வைக்கப்படாததுதான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  
     இதையடுத்து, குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர், உயிரிழந்த இளைஞருக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மதியம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படும் எனவும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai