Enable Javscript for better performance
பொது மக்களுக்கு மிரட்டல் விடுத்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பொது மக்களுக்கு மிரட்டல் விடுத்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள்

    By DIN  |   Published on : 22nd April 2017 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்ணீர் லாரியால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சிலர் போலீஸார் முன்னிலையிலேயே மிரட்டியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.                 
      பொள்ளாச்சி, தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்டது சிங்காநல்லூர் கிராமம். இந்த கிராமத்தை ஒட்டிய விவசாய நிலத்தைச் சேர்ந்த சிலர் ஆழியாற்றில் இருந்து இலவச மின்சாரம் மூலமாக கிணற்றுக்குத் தண்ணீர் எடுத்து அந்தத் தண்ணீரை கிணற்றில் இருந்து லாரிகள் மூலமாகக் கொண்டு சென்று விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.
      இவ்வாறு தண்ணீர் எடுத்துச் செல்லும் லாரிகள் சிங்காநல்லூரில், குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதால் அவை எழுப்பும் சத்தத்தில் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதாகவும், பகல் நேரத்தில் செல்லும் லாரிகள் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும் கூறி வியாழக்கிழமை இரவு சிங்காநல்லூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
      இரவு 8 மணிக்கு தொடங்கிய மறியல் 10 மணி வரை நீடித்தது. ஆனைமலை காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சிலர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் முன்னிலையிலேயே மிரட்டியதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனராம்.
     அப்போது, தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், தண்ணீர் லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகப் பொதுமக்களிடம் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai