Enable Javscript for better performance
மின்னணு வழிக் கற்றல் கல்வி முறையில் மேலும் 350 பாடங்களை இணைக்க முடிவு: ஏஐசிடிஇ தலைவர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    மின்னணு வழிக் கற்றல் கல்வி முறையில் மேலும் 350 பாடங்களை இணைக்க முடிவு: ஏஐசிடிஇ தலைவர் தகவல்

    By DIN  |   Published on : 22nd April 2017 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு உருவாக்கியுள்ள "ஸ்வயம்' மின்னணு வழிக் கற்றல் கல்வி முறையில் மேலும் 350 பாடங்களை விரைவில் இணைக்க முடிவு செய்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
     மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியன சார்பில் மின்னணு வழிக் கற்றலில் உள்ள சவால்களும், வாய்ப்புகளும் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     இந்தப் பயிலரங்கைத் தொடக்கிவைத்த பின்னர் அனில் டி.சஹஸ்ரபுத்தே செய்தியாளர்களிடம் பேசியதாவது:
     தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஏஐசிடிஇ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், சில கல்வி நிறுவனங்கள் 10 முதல் 15 ஆண்டுகளுக்குக்கூட பாடத் திட்டத்தை மாற்றாமல் வைத்துள்ளன. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ற தரமான பாடத் திட்டங்களைக் கற்பிக்காததால், அந்த நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
     ஆகவே, பாடத் திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இந்தியாவில் 275 கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரிவித்து ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருப்பதாகும்.
     மின்னணு வழிக் கற்றல் முறைக்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள "ஸ்வயம்' என்ற ஆன்லைன் கல்வி முறையில் தற்போது 280 பாடங்கள் உள்ளன. மேலும் 350 பாடங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளன. அதே வேளையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடங்கள் ஆன்லைனில் இருக்கும். பொறியியல் பாடங்கள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் ஆன்லைனில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளோம். சில கல்வி நிறுவனங்களில் உரிய அனுமதி இல்லாத பாடங்களை நடத்துவது குறித்த புகார்கள் வந்துள்ளன. அந்தப் பாடப் பிரிவுகளை நடத்தத் தடை விதிக்குமாறு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளோம்.
     மாற்றுத் திறனாளிகளுக்கான பாடங்களைக் கற்பிக்க பிரத்யேக மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
    ஏற்கெனவே சண்டீகரில் இந்த மையம் உள்ளது. கொல்கத்தா, போபால் மற்றும் சென்னை அல்லது கோவையில் புதிதாக மையம் உருவாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
      இந்நிகழ்ச்சியில், ஏஐசிடிஇ இயக்குநர் மன்பிரீத் சிங் மன்னா, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, பிரிட்டிஷ் கவுன்சில் தலைமை நிர்வாகி பருல் குப்தா, கல்லூரி முதல்வர் ஜே.ஜேனட், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai