Enable Javscript for better performance
அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் எழுதுவதில்லை: நீதிபதி ஆர்.மகாதேவன்- Dinamani

சுடச்சுட

    

    அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் எழுதுவதில்லை: நீதிபதி ஆர்.மகாதேவன்

    By DIN  |   Published on : 24th April 2017 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    படைப்பாளிகள் எந்தக் காலகட்டத்திலும் அங்கீகாரம் கருதி தங்கள் படைப்புக்களைத் தருவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசினார்.
     உலக புத்தகத் திருநாளை ஒட்டி, விஜயா வாசகர் வட்டம் சார்பில் விருது வழங்கும் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமை வகித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பேசியதாவது:
     17 ஆண்டுகளுக்கு முன் எனது தந்தையால் எனக்கு அடையாளம் காட்டப்பட்டவர் எழுத்தாளர் வண்ணநிலவன். எனக்கு அவரிடம் சகோதரத்துவம் நிறைந்த ஒரு வாஞ்சை உண்டு. வண்ணநிலவனும், வண்ணதாசனுடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி.  மனிதன் தோன்றியது முதலே சிந்தனை என்னும் நிகழ்வு அவன் உள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. காலங்கள் தோறும் அவன் மனதின் எண்ணங்களைப் பதிவு செய்ய ஆரம்பிக்கிறான். ஆதி காலத்தில் குகை ஒவியங்களாக, வரி வடிவங்களாக அவை இருந்தன. காலப்போக்கில் அவை பல்வேறு மாறுதல்களை அடைந்து படைப்பு என்னும் பரிணாமமாக நிலவி நிற்கிறது.
     படைப்பாளியின் உள் மனங்களை அவ்வளவு எளிதாக யாரும் அறிந்து கொள்ள இயலாது. படைப்பு சார்ந்த விஷயங்களை மண்ணுக்கே, மொழிக்கே உரித்த கலாசாரங்களில் மாற்றித் தருபவர்கள் படைப்பாளிகள்தான். படைப்பாளிகள் எந்தக் காலகட்டத்திலும் அங்கீகாரம் கருதி படைப்புக்களைத் தருவதில்லை. எனினும் அவர்களை மதிக்கும் சமூகம் உயர்வடைகிறது என்றார்.
     இந்த நிகழ்ச்சியில், விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஜெயகாந்தன் விருதும், ரூ. 1 லட்சம் பணமுடிப்பும், எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது.
     ரூ. 25 ஆயிரம் பணமுடிப்புடன் கவிஞர் மீரா விருது எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாருக்கும், ரூ. 25 ஆயிரம் பணமுடிப்புடன் புதுமைப்பித்தன் விருது எழுத்தாளர் என்.ஸ்ரீ ராமுக்கும், ரூ. 15 ஆயிரம் பணமுடிப்புடன் சத்தி வை.கோவிந்தன் விருது கோத்தகிரி அரசு நூலகர் என்.பி.ரவிக்கும் வழங்கப்பட்டன.  முன்னதாக சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் வரவேற்புரையாற்றினார்.
     இதில், நீதிபதிகள் கே.ஆர்.மதுரசேகரன், எம்.நம்பிராஜன், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், எம்.கோபாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் கந்தசுப்ரமணியம், துரை, திறனாய்வாளர் ந.முருகேசபாண்டியன், கவிஞர் கவிதாசன், அன்பு சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai