அரசுப் பொருட்காட்சி தொடக்கம்: 45 நாள்கள் நடைபெறுகிறது
By DIN | Published on : 24th April 2017 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சியை செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு பொருட்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் மூலம் காய்கறிக் கொள்முதல் வாகனம் வாங்க ரூ. 1.08 லட்சம் தொகையும், பண்ணைக் கருவிகள் வாங்க ரூ. 2 ஆயிரம் மானியத் தொகையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ. 5.28 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும் வழங்கப்பட்டன.
மேலும், 5 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் சக்கர நாற்காலியும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக 9 பயனாளிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், 11 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணை என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ. 7.83 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை துணைத் தலைவர் மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், அம்மன் கே.அர்ச்சுணன், கஸ்தூரிவாசு, செய்தித் துறை கூடுதல் இயக்குநர் உல.ரவீந்திரன், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.