Enable Javscript for better performance
நாளை முழு அடைப்பு: கோவை தொழில் அமைப்புகள் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்குப் பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
    விவசாயக் கடனை ரத்து செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    டாக்ட்: இதுகுறித்து தமிழ்நாடு கைத் தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் வெளியிட்ட அறிக்கை:
    விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குறுந்தொழில் முனைவோர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தொழிற்சாலைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    காட்மா: கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் எஸ்.ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
    விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு தொழில் முனைவோர் சார்பில் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். முழுஅடைப்பு போராட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இயங்கி வரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    வணிகர் சங்கங்களின் பேரவை:
    விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ள கடைகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கோவை மாவட்டத் தலைவர் மாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சாலைப் போக்குவரத்து சம்மேளனம்:
    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இயக்கப்படும் வேன், சரக்கு ஆட்டோ, டூரிஸ்ட் வாகனங்கள், மினி பேருந்துகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஏப்ரல் 25-ஆம் தேதி இயக்கப்படாது என தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai