மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
By DIN | Published on : 24th April 2017 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மேட்டுப்பாளையத்தை அடுத்த எடையார்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்த அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட்டன. பிளாக்தண்டர், ஈஎம்எஸ் மயூரா, ஜி.வி. இன்டர்நேஷனல், சூர்யா ஹோட்டல் உள்ளிட்ட சாலையோர தங்கும் விடுதிகளில் இருந்த அனைத்து மதுக் கூடங்களும் மூடப்பட்டன. காரமடை சாலை சி.டி.சி அருகே இருந்த மதுக் கடை மட்டும் அங்கிருந்து அருகிலுள்ள எடையார்பாளையம் பகுதியிலுள்ள தோட்டப் பகுதிக்கு மாற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகருக்கே இந்த ஒரே ஒரு மதுக் கடை மட்டும் இருப்பதால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரத் தொடங்கியது. இதனால், எடையார்பாளையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த மதுக் கடையை உடனடியாக மூடக் கோரி, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரமடை சாலை, அபிராமி திரையரங்கு முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு சசிகுமார் தலைமை வகித்தார். மகேந்திரகுமார், சிவகுமார், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை நடராஜ் துவக்கி வைத்தார். இதில், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சூலூரில்...:
சூலூர் அருகே செலக்கரச்சலில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக் கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மதுக் கடை மீது கல்வீச்சு நடைபெற்றது. தகவலறிந்து வந்த சூலூர் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிகாரிகளுடன் பேசி இதுதொடர்பாக இரண்டு நாள்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
துடியலூரில்...:
துடியலூரை அடுத்த கணுவாய் பகுதியில் புதிதாக மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆனைகட்டி சாலையில் சனிக்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த துடியலூர் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.