Enable Javscript for better performance
இன்று முழு அடைப்பு போராட்டம்: லாரிகள், ஆட்டோக்கள்  இயங்காது: பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள்- Dinamani

சுடச்சுட

    

    இன்று முழு அடைப்பு போராட்டம்: லாரிகள், ஆட்டோக்கள்  இயங்காது: பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல்

    By DIN  |   Published on : 25th April 2017 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவையில் ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள், போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் தொழிலாளர் சங்கமும் ஆதரவளிப்பதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
    சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் பங்கெடுக்க இருப்பதாக, கெளரவத் தலைவர் எஸ்.ஆர். பழனிசாமி, பொதுச் செயலர் பி.ஏ.காளிமுத்து ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேபோல், கோவை பம்ப்செட், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பம்ப்செட் உற்பத்தி தொழிலாளர்கள் விவசாயிகளையே நம்பியிருப்பதால் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
    இதனால், கோவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, பம்ப்செட் தொழிற்கூடங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழில் நிறுவனங்களும் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    இதேபோல், போராட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் கோவையில் செவ்வாய்க்கிழமை சுமார் 4,500 லாரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பால், சமையல் எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் வழக்கம்போல இயங்கும் என்று லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
    அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் பயணிகள் ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் பெருமளவில் இயங்காது என்று கருதப்படுகிறது.
     அரசுப் பேருந்துகள் இயங்கும்
    முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக, இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், அரசுப் பேருந்துகள் இயங்கும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கோவை கோட்டத்தில் உள்ள நகரப் பேருந்துகள், புறநகர் பேருந்துகள் உள்ளிட்ட சுமார் 2,700 பேருந்துகளும் செவ்வாய்க்கிழமை வழக்கம் போலவே இயங்கும் என்றும் இதற்காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஓட்டுநர்கள் பணிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்டோர் திங்கள்கிழமை இரவு பணிமனைகளிலேயே தங்க வைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இரவு, காலை உணவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும்படியும் பணிமனை அதிகாரிகளுக்கு கோட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
    இதற்கிடையே செவ்வாய்க்கிழமை பணிக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதனால், அரசுப் பேருந்து போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று கருதப்படுகிறது.
    3 ஆயிரம் போலீஸார்
    முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
     கோவை மாநகரில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், விமான நிலையம், கடை வீதி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    கோவை புறநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai