Enable Javscript for better performance
செம்மொழி, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் பழுது- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் இருந்து கோவைக்கு வந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் அருகே திங்கள்கிழமை காலை பழுதடைந்து நின்றது. இதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மீனாட்சிபுரம் அருகே பழுதாகி நின்றது.
    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வந்தபோது திடீரென ரயில் என்ஜின் பழுதாகி நின்றது. இதுகுறித்து கோவை ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    பின்னர் கோவையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 6.30 மணி அளவில் பொருத்தப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால், கோவைக்கு வரவேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக கோவை ரயில் நிலையம் வந்தடைந்தன. இதனால் இந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.  
    திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு வழியாக பொள்ளாச்சிக்கு வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் தமிழக-கேரள எல்லை அருகே மீனாட்சிபுரம் அருகே திங்கள்கிழமை காலை 9.25 மணிக்கு பழுதாகி நின்றது.
    இதைத் தொடர்ந்து, பாலக்காடு பணிமனையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு காலை 10.35 மணிக்கு ரயில் பாலக்காடு பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனால், ரயிலில் வந்த பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். அவர்கள் அனைவரும், வளந்தாயமரம் பகுதிக்கு வந்து பேருந்தில் பொள்ளாச்சிக்கு சென்றனர்.
    தகவல் தர மக்கள் தொடர்பு அதிகாரி மறுப்பு
    பாலக்காடு கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகள் இருப்பதால் இந்த இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து பாலக்காடு கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி கோபிநாத் தமிழ் பத்திரிகைகளுக்கு தகவல் தர மறுக்கிறார். அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பழுது குறித்து திங்கள்கிழமை கேட்க பலமுறை
    தொடர்புகொண்டபோதும், அவர் செல்லிடப்பேசியை எடுக்கவில்லை. பிறகு தொடர்பு கொண்டபோது, ரயில் பழுது மட்டுமே எனக்கு தெரியும்; மீதமுள்ள தகவல்கள் தெரியாது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai