Enable Javscript for better performance
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு: விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

    By DIN  |   Published on : 25th April 2017 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூலிப் பிரச்னை தொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 22 நாள்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
    ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே கூலி உயர்வு தொடர்பாக 2014-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி கூலியை உயர்த்தி வழங்காமல் குறைத்து வழங்கி வருவதாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர் துறையிடம் முறையிட்டனர்.
    இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, கோவை மாவட்டம், சோமனூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஏப்ரல்  2-ஆம் தேதி முதல்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தோல்வியில் முடிந்தது.
    இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிலாளர் துறை அலுவலர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
    அப்போது, சந்தை நிலவரம் மந்த நிலையில் உள்ளதால் சரக்கு தேக்கம் அடைந்துள்ளதாகவும், அதனால் ஒப்பந்த கூலியை வழங்க இயலவில்லை எனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியைக் குறைத்து வழங்குவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், தொழிலாளர்களுக்கு கூலியை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தக் கூலியை வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    ஜவுளி உற்பத்தியாளர்கள், ஒப்பந்தப்படி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும். ஒப்பந்தப்படி கூலியை வழங்கவில்லை என புகார் தெரிவிக்கபட்டால் சம்பந்தப்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
    இதைத் தொடர்ந்து, ஒப்பந்தப்படி கூலியை வழங்குவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, கடந்த 22 நாள்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு புதன்கிழமை முதல் விசைத்தறிகளை இயக்கப் போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai