Enable Javscript for better performance
கவிஞர் கவிதாசனுக்கு தமிழ்ச் செம்மல் விருது- Dinamani

சுடச்சுட

    

    கோவையைச் சேர்ந்த கவிஞர் கவிதாசனுக்கு தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
     தமிழக முதல்வரிடம் செவ்வாய்க்கிழமை விருது பெற்ற கவிஞர் கவிதாசன், கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநராக உள்ளார். மேலும், கோவை, கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலராகவும், கோவை உற்பத்திக் குழுத் தலைவர், தன்னம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.
    மாணவர்கள், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாகவும், அவர்களின் சிந்தனைகளைத் தூண்டும் விதமாகவும் சுமார் 60 நூல்களை எழுதியுள்ளார். இவரது கருவறை ஓலங்கள் என்ற நூல் அகில பாரத கவி சம்மேளனத்தால் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு 18 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
    கடந்த 2015-இல் மலேசியாவில் நடைபெற்ற 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழக அரசின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட இவர், கோவை வசந்த வாசல் கவிமன்றத்தின் தொடக்க காலத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
    கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவராக இருந்தபோது "அறிமுகம்' எனும் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். கல்லூரியின் தமிழ் மன்றச் செயலராகவும் இருந்துள்ளார். இவர், கோவை பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனம், ராமகிருஷ்ணா வித்யாலயா கல்வி நிறுவனங்களின் சிறந்த முன்னாள் மாணவர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
    கோவை மில்லினியம் சுழற்சங்கத்தின் தவத்தொழில் வித்தகர் விருது, தில்லி தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் நம்பிக்கை நாவரசு பட்டம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்வியல் சிந்தனை ஒளி போன்ற பட்டங்களையும் கவிஞர் கவிதாசன் பெற்றுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai