Enable Javscript for better performance
குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் பீளமேடு, போத்தனூர் பகுதிகள்- Dinamani

சுடச்சுட

    

    குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் பீளமேடு, போத்தனூர் பகுதிகள்

    By DIN  |   Published on : 26th April 2017 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகரில் பீளமேடு, போத்தனூர் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை திருட்டு, கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 1 கோடியே 82 லட்சத்து 34 ஆயிரத்து 850 மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
    இதில், ரூ. 1 கோடியே 55 லட்சத்து 17 ஆயிரத்து 960 மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. வழிப்பறி செய்யப்பட்ட பொருள்களில் 85 சதவீதப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. 17 வழக்குகளில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
    இதுகுறித்து, கோவை மாநகரக் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை மாநகரைப் பொருத்தவரை பீளமேடு, போத்தனூர் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலேயே அதிக அளவில் வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்று வருவது காவல் துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் முன்னரே அவற்றில் ஈடுபட்டு வருபவர்களாக இருப்பர்.
    ஆனால், வழிப்பறிச் சம்பவங்களில் தற்போது ஈடுபடுபவர்கள் புதியவர்களாகவே உள்ளனர். அதிலும் வறுமை காரணமாகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் சில கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கூட இந்தச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அதேவேளையில், கோவையில் தங்கிப் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களும் இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, தனியாகச் செல்லும் பெண்கள் அதிக அளவில் நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
    மேலும், வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது, சந்தேகப்படும்படியான நபர்கள் முகவரி கேட்பது, தண்ணீர் கேட்பதுபோல வருபவர்களிடம் பேசுவதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai