Enable Javscript for better performance
முழு அடைப்புப் போராட்டம்: கோவை மாவட்டத்தில் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    முழு அடைப்புப் போராட்டம்: கோவை மாவட்டத்தில் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு

    By DIN  |   Published on : 26th April 2017 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 2,109 பேர் கைது செய்யப்பட்டனர்.
     விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புது தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஏப்ரல் 25-ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
     இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்த அறிவிப்பின்படி கோவையில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. காந்திபுரம், டவுன்ஹால், 100 அடி சாலை, கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம், கணபதி, அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.
     அதேவேளையில், ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. பின்னர், கட்சியினர் அறிவுறுத்தலின்படி அந்தக் கடைகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில், காந்திபுரம் அண்ணா சிலை அருகே முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையிலான திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், திமுக மாவட்டப் பொருளாளர் நாச்சிமுத்து, தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
     இதேபோல, வடகோவை மேம்பாலம் அருகே, கிராஸ்கட் ரோடு சந்திப்பில் திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி, தெற்கு மாவட்டச் செயலாளர் நாச்சிமுத்து ஆகியோர் தலைமையில் திரளானோர் மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், புறநகர் மாவட்டத் தலைவர் மகேஷ்குமார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன், மக்களவை முன்னாள் உறுப்பினர் நடராஜன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகி பஷீர், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 300 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
     கோவை, காளப்பட்டியில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பையாகவுண்டர் தலைமையில சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர். உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு, சுந்தராபுரம், சிங்கநல்லூர் உள்ளிட்ட 17 இடங்களில் மறியில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 879 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
    பேருந்துகளில் கூட்டம் குறைவு: முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக அரசு பேருந்துகள் மற்றும் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்கின. பேருந்துகளில் வழக்கத்தை விடக் கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும், நகரின் முக்கியச் சாலைகளில் பொது மக்களின் போக்குவரத்தும் குறைவாகவே காணப்பட்டது.
     அதேபோல, பயணிகள் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், கால் டாக்ஸிகள் உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படவில்லை.
     அதேசமயம், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள், மதுக்கடைகள் செயல்பட்டன. மாவட்டம் முழுவதிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு:  இப்போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மோட்டார் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள், ஆட்டோ மொபைல், பம்புசெட் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள 30 ஆயிரம் தொழிற்சாலைகளில் ரூ. 300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
     அதேபோல், கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட், டி.கே.மார்க்கெட், உக்கடம் மார்க்கெட், அண்ணா மார்க்கெட்டுகளும் மூடப்பட்டதால் 3 ஆயிரம் டன் காய்கறிகள் தேக்கமடைந்தன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
     மேலும், கோவை மாவட்டத்தில் நகைக்கடை உரிமையாளர்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ. 15 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
     இந்தப் போராட்டத்தில் 90 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டதாலும், பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
    வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு: போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோயம்புத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தினரும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில், 3 ஆயிரம் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
     மாவட்டத்தின் பிற பகுதிகள்...
    அன்னூர்: அன்னூர் பயணியர் மாளிகை முன்பு, ஒன்றிய திமுக செயலாளர் ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்னூர் நடராஜன் ஆகியோர் தலைமையில் கூட்டணி கட்சியினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட முயன்ற 82 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
    கோவில்பாளையம்: எஸ்.எஸ்.குளம் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையன், மாவட்டப் பொருளாளர் மணி (எ) விஜயகுமார், உள்ளிட்டோர் தலைமையில் கூட்டணி கட்சியினருடன் கோவில்பாளையம் பேருந்து நிலையம் முன்பு சத்தி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50 பேரை கோவில்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர்.
    பெரியநாயக்கன்பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற சாலை மறியலில் ஒன்றிய திமுக செயலாளர் பத்மாலயா இரா.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.பாலமூர்த்தி, திமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பெ.அர.கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
     இதேபோல, துடியலூர் அருகே கணுவாய் பகுதியில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை துடியலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி: பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில், திமுக மாவட்டச் செயலாளர் தமிழ்மணி தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமுமுக உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
     இதேபோல, பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வால்பாறை: வால்பாறை காந்தி சிலை முன்பு திமுக ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமையில்  மறியலில் ஈடுபட்ட மாவட்ட வழக்குரைஞர் அணித் துணை அமைப்பாளர் பால்பாண்டி உள்ளிட்ட 50 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
    சூலூர்: சூலூர் வட்டத்தில் சூலூர், பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சூலூர் பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்ற போராட்டத்துக்கு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணித் தலைவர் சன் ராஜேந்திரன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.  சுல்தான்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்கு சுல்தான்பேட்டை ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். இதில், 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
     பாப்பம்பட்டி பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக சூலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேசன், வார்டு முன்னாள் உறுப்பினர் சண்முகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர்.
    மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு திமுக மாவட்டச் செயலர் சி.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில்
    நடைபெற்ற மறியல் போராட்டத்தில் டி.ஆர். சண்முகசுந்தரம், எஸ்எம்டி.கல்யாணசுந்தரம், பிரஸ் சிவகுமார், காரமடை நகரச் செயலர் வெங்கடேஷ், கூடலூர் அறிவரசு, காங்கிரஸ் சார்பில் மீனாஹரி ராமலிங்கம் ஆகியோர் உள்பட 130-க்கும் மேற்பட்டோரை மேட்டுப்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர்.
    காரமடை: காரமடையில் ஒன்றிய திமுக செயலர் ஆனைகட்டி சுரேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
      இதில், கோவை மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 2,109 பேர் கைது செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai