Enable Javscript for better performance
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும்: கல்வி அலுவலகத்தில் மதிமுகவினர் மன- Dinamani

சுடச்சுட

    

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும்: கல்வி அலுவலகத்தில் மதிமுகவினர் மனு

    By DIN  |   Published on : 27th April 2017 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மதிமுக சார்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
     இது குறித்து மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் தலைமையிலான அக்கட்சியினர், கோவை முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
     அதன் பின்னர், இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     கடந்த 5 ஆண்டுகளாக மதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு, இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    இது வெற்றிக்கான முதல் படிதான். இருப்பினும் ஏழை மாணவர்கள் ஏமாற்றப்படாமல் இருக்க மேலும் சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
     தற்போது, விண்ணப்பம் அளிப்பது மட்டுமே அரசு இணையதளத்தின் மூலமாக நடைபெறுகிறது. ஆனால், மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நடத்துவதைப் போலவே, தனியார் பள்ளிகளிலும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
     அதேபோல், மாணவர்கள் வசிப்பிட தொலைவு குறித்து தெளிவான அறிவிப்பு வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மாணவர்களால் மொத்த இலவச இடங்களும் நிரம்பாத சூழலில், வசிப்பிடத் தொலைவை அதிகப்படுத்தி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.
     வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் குலுக்கலில் சம வாய்ப்பு இருப்பதாலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் அனைவருக்கும் வருமான வரம்பு தேவையில்லை என்று அரசு முடிவு செய்திருப்பதாலும், தற்போதைய நிலையில் ஏழை மாணவர்கள் இலவச இடங்களைப் பெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இதில், சிறப்புப் பிரிவினரைத் தவிர மற்ற அனைவருக்கும் வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
     அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில், எந்தெந்தப் பள்ளிகளில், எந்த தேதியில், எந்த அதிகாரி முன்னிலையில் குலுக்கல் நடைபெறும் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள இலவச காலியிடங்கள் குறித்தும் அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளை வலியுறுத்தியிருப்பதாக மதிமுகவினர் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai