Enable Javscript for better performance
மலிவு விலையில் மருந்துகள்: "ஜன் ஒளஷதி' திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: வானதி ச- Dinamani

சுடச்சுட

    

    மலிவு விலையில் மருந்துகள்: "ஜன் ஒளஷதி' திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

    By DIN  |   Published on : 27th April 2017 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழை மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைக்க, மத்திய அரசின் "ஜன் ஒளஷதி' திட்டத்துக்கு தமிழ அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மருந்தியல் துறையின் கீழ், ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மத்திய அரசு, பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்திரா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் முதல்கட்டமாக 300 மருந்தகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மண்டலங்களில் 70 மருந்தகங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பித்த பலரும் மருந்தகங்கள் அமைக்கவில்லை.
    எனவே, இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் நடைபெற்ற பயிலரங்கத்தில் பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பேசியதாவது:
     ஜன் ஒளஷதி திட்டத்தின் கீழ் மருந்தகங்கள் அமைக்க முன்வருபவர்களுக்கு மத்திய அரசு ரூ.2.5 லட்சம் மானியம் அளிக்கிறது. மேலும், தன்னார்வ அமைப்புகள் சார்பில் மருந்தகங்கள் அமைத்தால் மானியத்துடன் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
    இந்த மருந்தகங்களில், ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் சந்தை விலையில் இருந்து நான்கில் ஒரு பங்கு விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும். மருந்துகளின் மூலக்கூறு அடிப்படையிலான (ஜெனரிக்) மருந்துகள் மட்டுமே இங்கு விற்பனை செய்யப்படும். இதில், உயிர் காக்கும் மருந்துகள் உள்பட 1,100 வகையான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு கிடையாது என்பதால், மத்திய அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்யப்படும். இதில், மருந்தக உரிமையாளர்களுக்கு 20 சதவீத அளவுக்கு லாபம் கிடைப்பதுடன், மருந்தகங்கள் அமைக்க கடனுதவி பெற்றுத்தரப்படும்.
    மேலும், மத்திய அரசு அலுவலகங்களில் மலிவு விலை மருந்தகங்கள் அமைக்க முடியும். தனியார் மருந்தக உரிமையாளர்கள், ஜன் ஒளஷதி திட்டத்தின் கீழ் மருந்தகம் அமைக்க முன்வர வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. எனவே, அரசு அலுவலகக் கட்டடங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலமாக மலிவு விலை மருந்தகங்கள் அமைத்து, ஏழை மக்களுக்கு மலிவு விலை மருந்துகள் கிடைக்க தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai