Enable Javscript for better performance
கோவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி: தீர்க்கப்படுமா வல்லபபாய் படேல் கல்லூரி மாணவர்களின் பிரச்னை?- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி: தீர்க்கப்படுமா வல்லபபாய் படேல் கல்லூரி மாணவர்களின் பிரச்னை?

    By DIN  |   Published on : 28th April 2017 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவை வந்துள்ள நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சர்தார் வல்லபபாய் படேல் ஜவுளி மேலாண்மையியல் கல்லூரி மாணவர்களின் பிரச்னைத் தீர்க்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
     கோவை, பீளமேடு பகுதியில் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் சர்தார் வல்லபபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மேலாண்மையியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
     தேசிய பஞ்சாலைக் கழகத்தின் அலுவலர்களுக்கான பயிற்சி மையமாக கடந்த 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மையம், 2004-ஆம் ஆண்டில் இந்திய ஜவுளி அமைச்சகத்தால் ஜவுளி மேலாண்மைக் கல்லூரியாக மாற்றப்பட்டது.
     இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 96 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு வழங்கப்படும் சான்றிதழ்களைக் கொண்டு வேலை பெறுவதில் சிக்கல் நீடிப்பதாகவும், மாணவர்களுக்கு போதிய எண்ணிக்கையில், தகுதியான, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. விடுதி வசதி, ஆய்வக வசதிகள் இல்லை. என்.சி.சி., என்.எஸ்.எஸ்., திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28-ஆம் தேதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த அவர்கள், மத்திய ஜவுளித் துறை அமைச்சர் நேரில் வந்து சந்தித்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். கடந்த முறை அமைச்சர் வந்திருந்தபோது, பிரச்னைகளுக்கு 4 மாதங்களில் தீர்வு காண்பதாக உறுதி அளித்துச் சென்றதையும் அவர்கள் நினைவூட்டி, இந்தக் கோரிக்கையை எழுப்பியிருந்தனர்.
     இருப்பினும், மத்திய ஜவுளித் துறை இயக்குநர் எஸ்.ஆர்.கெய்க்வாட் மட்டுமே கல்லூரிக்கு வந்து ஆய்வு செய்து ஜவுளித் துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இந்த விவகாரத்துக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
     இதற்கிடையே மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை கோவை வந்துள்ளார். வெள்ளிக்கிழமையும் அவர் தங்கியிருந்து, ஜவுளித் துறையினர் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
     இதனால், சர்தார் வல்லபபாய் படேல் கல்லூரி பிரச்னைக்கும் அவர் தீர்வு காண வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
     இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:
     மத்திய அமைச்சர் கோவை வரும் தகவல் உறுதி செய்யப்பட்டதாலேயே கல்லூரிக்கு நிர்வாகத்தினர் அவசர அவசரமாக விடுமுறை அளித்து, காவல் துறையினரைக் கொண்டு மாணவர்களை வெளியேற்றியுள்ளனர்.
     இருப்பினும், வட மாநிலங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியிலேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் திடீரென கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்ய வரக் கூடும் என்பதால், கல்லூரி வளாகத்தை அவசரமாக வியாழக்கிழமை சுத்தம் செய்துள்ள நிர்வாகம், விடுதி மாணவர்களுக்குப் புதிதாக எல்.இ.டி. டி.வி, சலவை இயந்திரம் போன்றவற்றை வாங்கி வைத்துள்ளனர்.
     கல்லூரிக்கு அமைச்சர் வரும்பட்சத்தில் அவரிடம் குறைகளைத் தெரிவிப்பதற்காக நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். மேலும், கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு வர உள்ளோம். அமைச்சரை எப்படியாவது சந்தித்து, எங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய இந்த முக்கியமான பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்த உள்ளோம் என்றனர்.
     இதற்கிடையே, கல்லூரியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அமைச்சர் ஸ்மிருதி இரானி கல்லூரி வளாகத்துக்குச் செல்வது சந்தேகம்தான் என்றும், அதேநேரம் கல்லூரி அதிகாரிகள், மாணவர் பிரதிநிதிகளை தனியே வரவழைத்து இருதரப்பினரின் பிரச்னைகளையும் கேட்டுத் தீர்வு காண்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai