Enable Javscript for better performance
கெளசிகா நதி நீர் மறிக்கப்படும் விவகாரம்: ஓரிரு நாள்களில் கள ஆய்வு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அ- Dinamani

சுடச்சுட

    

    கெளசிகா நதி நீர் மறிக்கப்படும் விவகாரம்: ஓரிரு நாள்களில் கள ஆய்வு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி

    By DIN  |   Published on : 29th April 2017 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெளசிகா நதியின் பிரதான ஓடை மறிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தில் மே முதல் வாரத்தில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
     கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
     இதில், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தரப்பில் கே.ரங்கசாமி, சு.பழனிசாமி, துரைசாமி, செல்வராஜ், பெரியசாமி, பாலு, கந்தசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
    துரைசாமி: கெளசிகா நதியின் பிரதான ஓடையானது பூச்சியூர் அருகே உள்ள குருஅருள் மலையில் (குருடிமலை) தொடங்குகிறது. இந்த ஓடையை கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் தடுத்து, அதன் பாதையை மாற்றியிருப்பதால், ஓடையை நம்பியுள்ள 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
     பி.கே.செல்வராஜ்: கெளசிகா நதியின் இயற்கையான நீர்வழிப் பாதையை சிலர் திசை மாற்றியிருப்பது சட்ட விரோதமாகும். இதனால், நதியின் இயற்கையான பாதையை ஒட்டியுள்ள 21 ஊராட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
     எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, நதியானது சுல்தான்பேட்டை வரையிலும் தடையின்றி பாய்வதற்கு, மாவட்ட நிர்வாகம், வனத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     ஆறுசாமி: கருணாகரன் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில், கெளசிகா நதிக்கு வரும் நீரை சிலர் தடுப்பது சட்ட விரோதம் என்று கூறி, ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையை அதிகாரிகள் இடித்து அகற்றினர். ஆனாலும், இந்தப் பிரச்னை இதுவரை முடிவுக்கு வரவில்லை என்றார்.
     இதையடுத்து, இந்தக் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், மே முதல் வாரத்தில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, குருஅருள் மலை மீது சென்று ஆய்வு நடத்தப்படும் என்று மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
    காஸ்டிங் கழிவுகள்:
     ஜெகந்நாதன்: அன்னூர் பகுதியில் காஸ்டிங் தொழிற்சாலைக் கழிவுகள் விவசாய நிலத்தில் கொட்டப்படுவதால் மண்ணும், நிலத்தடி நீரும் மாசுபடுகிறது என்றார்.
     காஸ்டிங் கழிவுகள் விவசாய நிலத்தில் கொட்டப்படுவது குறித்து அன்னூர் பகுதியில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உதவிப் பொறியாளர் நீலமேகத்துக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
     கந்தசாமி: கோவை மாவட்டத்தில் மழைப் பொழிவு அதிக அளவில் இருப்பதாக அதிகாரிகள் தவறான தகவல் தெரிவித்து வருகின்றனர். எனவே, மழை மானிகளை ஆய்வு செய்வதுடன் சராசரி மழையைச் சரியான விகிதத்தில் கணக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
     இதேபோல, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலர், கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.
     அதற்கு பதிலளித்த மின்வாரிய அதிகாரிகள், வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின் விநியோகத்தில் சிக்கல் இருந்ததாகவும் அது சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை முதல் விநியோகம் முறைபடுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai