Enable Javscript for better performance
துப்பாக்கியுடன் காரில் வந்த கும்பல் பிடிபட்டது: கொலை வழக்கில் பழிதீர்க்கத் திட்டமா?- Dinamani

சுடச்சுட

    

    துப்பாக்கியுடன் காரில் வந்த கும்பல் பிடிபட்டது: கொலை வழக்கில் பழிதீர்க்கத் திட்டமா?

    By DIN  |   Published on : 29th April 2017 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூர் அருகே துப்பாக்கியுடன் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    அவர்கள், கொலை வழக்கில் பழிதீர்க்கத் திட்டமிட்டு துப்பாக்கியுடன் வந்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூரில் துப்பாக்கி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் பற்றி ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அக் கும்பலைக் கண்காணித்து வந்த போலீஸார், அவர்களிடம் துப்பாக்கி வாங்குவதுபோல் பேசி வந்தனர்.
    இதில், திருச்சி காவல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் செந்தில்குமார் தனக்கு கைத் துப்பாக்கி வேண்டும் என அந்தக் கும்பலிடம் கேட்டுள்ளார். அப்போது, அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீஸாரை பல்வேறு இடங்களுக்கு வரவழைத்து அலைக்கழித்துள்ளனர்.
    இதைத் தொடர்ந்து, கோவையில் வைத்து துப்பாக்கி தருவதாக அக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்தக் கும்பலைப் பிடிக்க தஞ்சாவூரில் இருந்து சிறப்பு காவல் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
    துப்பாக்கி விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்களை கோவை மாவட்டம், சூலூர் அருகே போலீஸார் மடக்கிப் பிடித்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ஒரு துப்பாக்கி, 15 தோட்டாக்கள், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவை பீளமேட்டைச் சேர்ந்த வினுஜ், சரவணம்பட்டியைச் சேர்ந்த மதன்குமார், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன், கமுதியைச் சேர்ந்த கண்ணன், இருளாண்டி, திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்த சரத்பாபு ஆகியோர் காரில் துப்பாக்கியுடன் வந்தது தெரியவந்தது.
    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரைச் சேர்ந்த பாமக மாநிலத் துணைத் தலைவர் ஸ்டாலினின் தம்பி ராஜா 2015 ஏப்ரலில் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் லாலி மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டு கோவையில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 2015-இல் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
    அப்போது, கூலிப் படையினர் அவரைப் பின்தொடர்ந்து சென்று கோவை எல் அண்ட் டி புறவழிச் சாலை அருகே காரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், காரில் இருந்து லாலி மணிகண்டன் தப்பிச் சென்றார். இதில், கூலிப் படையிடம் சிக்கிய அவரது சகோதரர் மாதவன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாமக நிர்வாகி ஸ்டாலின் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    இவர்களில் ஸ்டாலின், சுந்தரமூர்த்தி, சரவணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தனர். எனவே, ஜாமீனில் வெளியே வந்தவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டு துப்பாக்கியுடன் கோவை வந்தார்களா என்பது குறித்து பிடிபட்ட கும்பலிடம்  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai