Enable Javscript for better performance
வல்லபபாய் படேல் கல்லூரி விவகாரம்: மே 1-இல் அதிகாரிகள் குழு விசாரணை: அமைச்சர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வல்லபபாய் படேல் கல்லூரி விவகாரம்: மே 1-இல் அதிகாரிகள் குழு விசாரணை: அமைச்சர் தகவல்

    By DIN  |   Published on : 29th April 2017 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சர்தார் வல்லபபாய் படேல் ஜவுளி மேலாண்மையியல் கல்லூரி விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை (மே 1) அதிகாரிகள் குழு விசாரணை நடத்தும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
     பீளமேடு பகுதியில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சர்தார் வல்லபபாய் படேல் ஜவுளி மேலாண்மையியல் கல்லூரியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை, விடுதி வசதி பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகக் கூறி கல்லூரி மாணவ, மாணவிகள் மார்ச் 28-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வியாழக்கிழமை கோவை வந்தார். வடகோவை பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவரிடம் சர்தார் வல்லபபாய் படேல் கல்லூரி மாணவ, மாணவிகள் மனு அளித்தனர்.
     அதில், கல்லூரியில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும், மாணவர் போராட்டம் குறித்தும் கூறியிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், மாணவர் போராட்ட விவகாரம் தனது கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு வரப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு குழு அமைத்து உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
     இந்தக் குழுவினர் மே 1-ஆம் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றும் அதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
     இதற்கிடையே ஜவுளித் துறை ஆணையர் கவிதா குப்தா, கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்று நிர்வாகத்தினர், விடுதி மாணவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார்.
     விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதால் கல்லூரியில் நிலவும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக போராட்டக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
     முன்னதாக பாஜக நெசவாளர் பிரிவின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
     ஜவுளித் துறையை மேம்படுத்த மத்திய அரசு பவர் டெக்ஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் கொள்முதல் செய்ய வசதியாக நூல் வங்கி தொடங்கப்படும்.
     தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் விசைத்தறித் தொழில் தொடங்க வசதியாக 75 முதல் 90 சதவீதம் வரையில் மானியத்துடன் கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதுதவிர கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மானிய விலையில் நூல் வாங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசியப் பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் ஏழை கைத்தறி நெசவாளர்களின் வாரிசுகளின் கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை ஜவுளித் துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும்.
     மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கும் உதவிடும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai