Enable Javscript for better performance
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தரம் பிரிக்காத குப்பைகளைக் கொட்டக் கூடாது: பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தரம் பிரிக்காத குப்பைகளைக் கொட்டக் கூடாது: பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவு

    By DIN  |   Published on : 29th April 2017 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தரம் பிரிக்காத குப்பைகளைக் கொட்டக் கூடாது என்று சென்னை பசுமைத் தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
     கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 850 டன் வரையிலான குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
     இதில், குறிப்பிட்ட அளவிலான குப்பைகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும் பல டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது.
     மேலும் புகை மூட்டம், கொசு, ஈக்களால் நோய்கள் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சுமார் 50 ஆயிரம் பேருக்கு பல்வேறு வகைகளில் இடையூறாக இருக்கும் கிடங்கை மூட வலியுறுத்தியும், கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற உத்தரவிடக் கோரியும் மதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், சென்னை மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
     மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, நீரின் மாதிரிகளையும் அவர் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி வெள்ளலூர் குப்பைக் கிடங்கின்
    சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 16 இடங்களில் நிலத்தடி நீரின் மாதிரிகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டது.
     இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி ஜோதிமணி மற்றும் நிபுணர் குழுவைச் சேர்ந்த பி.எஸ்.ராவ் ஆகியோர் வெள்ளிக்கிழமை விசாரித்தனர்.
     அப்போது, வெள்ளலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
     மேலும், குப்பைக் கிடங்கில் நாள்தோறும் கொட்டப்படும் பல நூறு டன் குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. வெள்ளலூர் குப்பைக் கிடங்கைச் சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு துர்நாற்றம் வீசி வருவதாகவும் ஈஸ்வரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
     தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி ஜோதிமணி, தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டுள்ள 19 லட்சம் டன் குப்பைகளை அகற்ற கால நிர்ணயம் செய்வது, நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கையாளத் தேவையான திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்தும் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
     மாநகராட்சியின் நூறு வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை 100 சதவீதம் மறுசுழற்சி செய்ய வேண்டும். இதில், தரம் பிரிக்காத குப்பைகளை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டக் கூடாது. ஏற்கெனவே கொட்டப்பட்ட பழைய குப்பைகளுடன், புதிய குப்பைகளைக் கொட்டக் கூடாது. இது தொடர்பாக அறிக்கையை ஜூலை 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai