கோவை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இந்த மாதத்துக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இம்முகாமில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, அனைத்து பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். மேலும், ஓட்டுநர், பிட்டர், டர்னர், கணினி ஆபரேட்டர் போன்ற தொழில் கல்வி பயின்ற அனைத்து தகுதி உடையவர்களும் பங்கேற்கலாம்.
இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க கட்டணம் இல்லை. ஆகவே இந்த வாய்ப்பை மனுதார்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகாமானது மேற்கண்ட தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.