வால்பாறை நகரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
வால்பாறை வனப் பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் கோவை மாவட்டம், வால்பாறை நகர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் சமீபகாலமாக அதிக அளவில் காணப்படுகிறது.
வனத்தின் எல்லைப் பகுதியில் மட்டுமே காணப்பட்ட சிறுத்தைகள், தற்போது எஸ்டேட் பகுதிகள் மற்றும் இரவு நேரத்தில் நகர் பகுதிகளுக்கும் வந்து செல்கின்றன.
இங்குள்ள கூட்டுறவு காலனியில் உள்ள தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், ஒரே சமயத்தில் மூன்று சிறுத்தைகள் செல்லும் காட்சி கடந்த வாரத்தில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து வனத் துறையினர் அந்த சாலையில் இரவு நேரம் ரோந்து பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில், வால்பாறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடந்து செல்வது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 3 மணிக்குப் பதிவாகியிருந்தது.
தொடர்ந்து இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.