கோவையில் ரூ. 50 லட்சம் கேட்டு பூ வியாபாரியைக் கடத்திய வழக்கில் கைதான 5 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர் காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டுள்ளார்.
கோவை, ஆர்.எஸ்.புரம், லிங்கப்ப செட்டி வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் விஷ்ணுராஜ் (40). இவர் பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜூன் 30 ஆம் தேதி கடைக்குச் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டார். மேலும், ரூ.50 லட்சம் கேட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதன் பிறகு திருச்சி அருகே புறவழிச்சாலையில் அவரை வீசி விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதனிடையே, விஷ்ணுராஜ் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.62 லட்சத்தையும் பறித்துள்ளனர்.
இதுகுறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இவர்களில் கைதான சந்தோஷ் (22), பிரபு (28), தினகரன் (33), சதாம் உசேன் (23), அரவிந்த் (23) ஆகியோர் மீது கோவை மாநகர், திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர் காவல் ஆணையர் பெரியய்யா புதன்கிழமை உத்தரவிட்டார். அதன்படி 5 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.