ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகப் புகார்

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் புரவிபாளையம் பகுதியில்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச்

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் புரவிபாளையம் பகுதியில்  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை மீட்பதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம், கோபாலையன்புதூரில் வசித்து வந்தவர் கோபண்ண மன்றாடியார். இவருடைய மகன் ரங்கசாமி கோபண்ண மன்றாடியார். இவரது நிலம் பொள்ளாச்சி வட்டம், ஜமீன்புரவிபாளையம் கிராமத்தில் உயில் சாசன எண் 17/1931-இல் குறிப்பிட்டுள்ள க.ச.எண் 67/2ஏ, 67/2பி, 67/4, 67/6, 69/1,3, 69/2பி, 70/1, 70/4ஏ, 71/1ஏ, 143, 144பி, 145, 148, 147/1 எண்களில் 220.30 ஏக்கர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 ரங்கசாமி கோபண்ண மன்றாடியாரின் மனைவி அலங்காரம்மாள். இவர்களுக்கு வாரிசு இல்லை. இதனால், ரங்கசாமி கோபண்ண மன்றாடியார் தனது மனைவி அலங்காரம்மாள் காலத்துக்குப் பின்னர் சொத்துகள் அனைத்தும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கைங்கர்யத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயில் எழுதிவைத்திருந்தார்.
 நிலத்தில் இருந்து வரும் வருவாயை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் இதை நிர்வகிக்க உரிமை உள்ளது எனவும் உயிலில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 1939-ஆம் ஆண்டு ரங்கசாமி கோபண்ண மன்றாடியார் இறந்துவிட்டார்.
 அதன்பின் பிறகு அவரது மனைவி அலங்காரம்மாளும் 1945-ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த 220 ஏக்கர் நிலமும் பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பல ஏக்கர் நிலங்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாகவும், பல ஏக்கர் நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கோயிலுக்கு இதுவரை நிலங்கள் உரிமைப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
 இப்படி 220 ஏக்கர் நிலம் பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமாக இருந்தும், இதுவரை ஒரு ஏக்கர் நிலம் கூட கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. கோயில் நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவந்ததாகத் தெரிகிறது.
 இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் இந்தக் கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும், தமிழக முதல்வருக்கும் இதுகுறித்து மனு அனுப்பியுள்ளார். இதையடுத்து, இந்த நிலங்களை மீட்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் மாதம் நடைபெற்றது. 
 இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆலய நிலங்கள்) முருகையா, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் விமலா, மேனகா, பொள்ளாச்சி வட்டாட்சியர் செல்வபாண்டி, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சென்னை திருத்தொண்டர்கள் சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தினர், நில அளவையர், சார்பதிவாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.
 நிலங்கள் யார் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அனைத்துத் துறையினரும் இணைந்து நிலங்களை மீட்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், கூட்டம் நடைபெற்று 45 நாள்களுக்கு மேலாகியும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
 இந்நிலையில், 2-ஆவது கட்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திருத்தொண்டர்கள் சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தார். 
இக்கூட்டத்துக்குத் தலைமையேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் முருகையாவும் அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
 திருத்தொண்டர்கள் சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  "ஜமீன் புரவிபாளையத்தில் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான 220 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே நான் இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தும் மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.
 அதனால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். வழக்குக்குப் பின்னர் டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஆக்கிரமிப்புகள் குறித்து விளக்கமளித்தேன். இருந்தும் நிலங்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே இந்த பிரச்னை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அல்லது அதற்கும் உயர்  அதிகாரிகளிடம் தெரிவிக்க உள்ளேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com