Enable Javscript for better performance
தோஷம் நீக்குவதாக கூறி நூதன முறையில் தாலிச் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தோஷம் நீக்குவதாக கூறி நூதன முறையில் தாலிச் சங்கிலி பறிப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தோஷம் நீக்குவதாகக் கூறி இரு பெண்களிடம் இருந்து தாலிச் சங்கிலியை நூதன முறையில் பறித்து சென்ற மூன்று பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குடுகுடுப்பைகாரர்கள் வந்து இரவு நேரங்களில் குறி சொல்லி பணம் பெற்று பூஜை செய்து வருகின்றனர். 
    இந்நிலையில்,  ஷேக்கல்முடி எஸ்டேட் முதல் டிவிஷன் குடியிருப்பு பகுதிக்கு கடந்த மாதம் 22-ஆம் தேதி 3 குடுகுடுப்பைகாரர்கள் இரவு நேரங்களில் சென்று வீட்டின் கதவு முன்பு நின்று  உடுக்கை அடித்து குறி சொல்லியுள்ளனர்.   அப்போது ராஜன், கணேசன் ஆகியோர் குடியிருப்பின் முன்பு நின்று அவர்களுக்கு தோஷம் இருப்பதாகவும்,  தோஷம் நீக்கவில்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்று தொடர்ந்து இரு நாள்கள் இரவில் வந்து கூறினார்களாம். 
    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜன் மனைவி நாகவல்லி (41),  கணேசன் மனைவி தனம் (42) ஆகியோர் பகல் நேரத்தில் வந்த குடுகுடுப்பைகாரர்களிடம் தோஷத்தை நீக்க பூஜை செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர்.  இதனையடுத்து அவர்களின் குடியிருப்புக்கு இரவில் வந்த 3  குடுகுடுப்பைகாரர்கள் நாகவல்லி, தனம் அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பெற்று பல்வேறு பரிகாரங்கள் செய்துள்ளனர். 
    தொடர்ந்து 3  நாள்கள் இரவில் பரிகாரம் செய்து ,  மூன்றாவது நாள் இரவில் தாலிச் சங்கிலியை ஒரு சொம்புக்குள் போட்டு அதற்கு துணியைச் சுற்றி கொடுத்துள்ளனர்.  15 தினங்கள் கழித்து சொம்பில் இருந்த துணியை அகற்றி அதிலுள்ள தாலிச் சங்கிலியை அணியக் கூறினார்களாம்.  இதற்காக ரூ. 5 ஆயிரம் பெற்று சென்றுள்ளனர்.  அதன்பிறகு அந்த மூவரும் அப்பகுதிக்கு வரவில்லை.  இந்நிலையில்,  பெண்கள் இருவரும் 15 நாளுக்குப் பிறகு சொம்பின் மேல் சுற்றியிருந்த துணியை அகற்றி உள்ளே பார்த்தபோது,  தாலிச் சங்கிலி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    இதுகுறித்து நாகவல்லி, தனம் ஆகியோர் அளித்த புகாரின்பேரில் ஷேக்கல்முடி எஸ்டேட் போலீஸார் வழக்குப் பதிவு தாலிச் சங்கிலியை நூதன முறையில் பறித்துச் சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai