Enable Javscript for better performance
பணியாளர்கள் இன்றி வெறிச்சோடிய பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம்- Dinamani

சுடச்சுட

    

    பணியாளர்கள் இன்றி வெறிச்சோடிய பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றதால் ஆள்கள் இல்லாமல் வெள்ளிக்கிழமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
    பொள்ளாச்சியை அடுத்த செம்பாக்கவுண்டர்காலனி, தொண்டாமுத்தூர், சூளேஸ்வரன்பட்டி, பொன்னான்ட கவுண்டனூர் ஆகிய அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராமச்சந்திரன், அங்கு முட்டைகள், அரிசிகளில் முறைகேடு நடப்பதை உறுதிசெய்தார். இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அதிகாரிகள் நடத்திய ஆய்விலும் இந்த நான்கு சத்துணவு மையங்களிலும் முட்டை, அரிசியில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, செம்பாக்கவுண்டர் காலனி சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட சிலருக்கு தெற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது.
    இந்நிலையில், சத்துணவு ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், சத்துணவு ஊழியர்கள் இரவு சமையல் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் சிலருக்கும், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
    இதை விடியோ எடுக்க முயன்ற கணினி பணியாளர் கார்த்தி என்பவரை சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் சிலர் தாக்கியதாகவும், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளை ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினருக்கும் சமரசம் செய்துவைத்துள்ளனர்.
    இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மீது அலுவலகப் பணியாளர்களைத் தாக்கியதாக புகாரும், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் இன்னாசிமுத்து, பழனிசாமி ஆகியோர் சார்பில், ஒன்றிய அலுவலர்கள் பெண்களை தாக்கியதாகவும் கிழக்கு போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இந்நிலையில், தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வெள்ளிக்கிழமை சென்றனர்.
    இதனால், பணியாளர்கள் இன்றி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல, சத்துணவு ஊழியர்களும் பெண்களை இழிவுபடுத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai