Enable Javscript for better performance
பிஏபி தண்ணீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் வால்பாறை எஸ்டேட் நிர்வாகங்கள்: குறைதீர் கூட்டத்தில் விவசா- Dinamani

சுடச்சுட

    

    பிஏபி தண்ணீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் வால்பாறை எஸ்டேட் நிர்வாகங்கள்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

    By DIN  |   Published on : 24th March 2018 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிஏபி தொகுப்பு அணைகளுக்கு வரும் தண்ணீரை வால்பாறையில் உள்ள எஸ்டேட் நிர்வாகத்தினர் மோட்டார் வைத்து சட்டவிரோதமாக எடுத்து தேயிலைத் தோட்டங்களுக்குப் பயன்படுத்துவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமை வகித்தார்.
    இதில் விவசாயிகள் பேசியதாவது: தற்போது வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளுக்குத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு மானிய விலையில் தீவனங்களை வழங்கவேண்டும். திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரை சிலர் காண்டூர் கால்வாயில் இருந்து எடுத்து முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், திருமூர்த்தி அணைக்கு கொண்டுசெல்லப்படும் நீரின் அளவு குறைகிறது. ஆவலம்பட்டி பகுதியில் பிஏபி கால்வாயில் தண்ணீர் திருடப்பட்டு லாரிகள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.
    நீராறு, சோலையாறு போன்ற அணைகளுக்கு வரும் நீரை அங்குள்ள எஸ்டேட் நிர்வாகங்கள் சட்ட விரோதமாக மோட்டர் வைத்து எடுத்து, தேயிலைத் தோட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தொகுப்பணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைகிறது. ஆழியாறு காவல் உதவி ஆய்வாளர் சிசிடிவி கேமரா பொருத்த அங்குள்ள கடைக்காரர்களிடம் அதிக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார். ஆனைமலையில், வேளாண்மைத் துறை அலுவலக கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இதற்கு பதில் அளித்துப் பேசிய சார்-ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai