Enable Javscript for better performance
விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: ஓரிரு நாளில் இரண்டு மாவட்ட ஆட்சி- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: ஓரிரு நாளில் இரண்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

    By DIN  |   Published on : 24th March 2018 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
    ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் இரண்டு மாவட்ட ஆட்சியாளர்கள், தொழிலாளர் நலத் துறையினர், அமைச்சர்கள் முன்னிலையில் 2014-ஆம் ஆண்டு ஒப்புக்கொண்ட கூலியை (சோமனுர் ரகங்களுக்கு 30 சதவீதமும், பிற ரகங்களுக்கு 27 சதவீதமும் உயர்வு) வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
    ஆனால், ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்காமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக குறைத்து வழங்கி வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். இதனால் விசைத்தறித் தொழில் மிகவும் நலிவடைந்து, பல லட்சம் தொழிலார்களுக்கு வேலை அளிக்கும் விசைத் தறியாளர்கள், அன்றாடச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல் சிரமத்தில் உள்ளனர். ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்தக் கூலியை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
    இதுதொடர்பாக, இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களைச் சந்தித்து 2017 டிசம்பரில் விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொழிலாளர் நலத் துறை மூலமாக நடவடிக்கை எடுப்பதாக இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் உறுதியளித்தனர்.
    இதையடுத்து, இரண்டு மாவட்டத் தொழிலாளர் அலுவலர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டத்துக்கு ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டத்துக்கு வராததால் எந்தவிதத் தீர்வும் ஏற்படவில்லை.
    இதையடுத்து, பிப்ரவரி மாதத்தில் தொழிலாளர் நலத் துறை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொள்ளாததால் எந்தத் தீர்வும் ஏற்படவில்லை.
    இந்நிலையில், மீண்டும் 22.02.2018 அன்று திருப்பூர் மற்றும் 23.02.2018. அன்று கோவையிலும் கூட்டத்துக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் தாங்கள் தற்போது வழங்கும் கூலி விவரங்களுடன் அவசியம் வர வேண்டும் என அறிவுறுத்தியும், பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொள்ளவில்லை.
    இந்நிலையில், கோவையில் தொழிலாளர் இணை இயக்குநர் செந்தில்குமாரி தலைமையில் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதில், சோமனூர் தலைவர் பழனிசாமி, பல்லடம் தலைவர் இரா.வேலுசாமி, தெக்கலூர் தலைவர் சுப்பு, அவிநாசி தலைவர் முத்துசாமி, 63 வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் இரண்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai