Enable Javscript for better performance
ஆழியாறு பகுதியில் காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு: கல்லூரி பேராசிரியரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஆழியாறு பகுதியில் காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு: கல்லூரி பேராசிரியரிடம் விசாரணை

    By DIN  |   Published on : 31st March 2018 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கருதப்பட்ட மாணவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவரின் சாவு குறித்து அவரது கல்லூரிப் பேராசிரியரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). இவர் நவமலையில் உள்ள தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் பூபதி (21). பொள்ளாச்சி அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ஆம் ஆண்டு படித்து வந்தார்.
    இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி ஆழியாறு அணைப் பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்ற பூபதி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தையின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், ஆழியாறு அணையை ஒட்டியுள்ள நவமலை வனப் பகுதியில் ஒரு மரத்தில் தொங்கியபடி பூபதியின் சடலம் இருப்பதை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கண்டுள்ளனர்.
    இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, பூபதியின் நண்பர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், பூபதியின் கல்லூரி பேராசிரியர் கார்த்திகேயன் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூபதிக்கு, பேராசிரியர் கார்த்திகேயன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதன் காரணமாகவே பூபதி தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. காணாமல் போன மாணவர் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai