Enable Javscript for better performance
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

    By DIN  |   Published on : 31st March 2018 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
     தமாகா கோவை மாவட்டத் தலைவர் வி.வி.வாசனுக்கு சொந்தமான வணிக வளாகத்தைத் திறந்துவைக்க  கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்,  அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு தாமதிக்கிறது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகள்,  தமிழக மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தமிழக மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். 
    காவிரி பிரச்னையை மாநிலப் பிரச்னையாகப் பார்க்காமல், தேசிய அளவிலான விவசாயிகளின் பிரச்னையாகக் கருதி நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.  தமிழகத்துக்கு காவிரி நீரைத் தரக் கூடாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. டெல்டா விவசாயிகள் ஒருபோக சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
    இந்த விவகாரம் தொடர்பாக தமாகா சார்பில் திருச்சியில் டெல்டா மாவட்ட விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 31) நடைபெறுகிறது.  அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும்,  அதற்கென போதிய அழுத்தம் தர தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 
    தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் தில்லிக்கு அழைத்துச் சென்று, முற்றுகைப் போராட்டம் நடத்த ஆளுங்கட்சி முன்வர வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து தில்லியில் போராட்டம் நடத்தினால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
    பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டுவதால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, புதிய தடுப்பணைகள் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
    இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம்,  தமாகா மாநில துணைத் தலைவர் கோவை தங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி.ஆர்.ரவிசந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தமாகாவில் இணைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai