Enable Javscript for better performance
கோவை அருகே 50 ஏக்கர் குளத்தைத் தூர்வாரும் பொதுமக்கள்!- Dinamani

சுடச்சுட

    

    கோவை அருகே குளத்துப்பாளையம் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தை அப்பகுதி மக்களே தங்களின் பணத்தை செலவு செய்து தூர்வார தொடங்கியுள்ளனர்.   
    கோவை மாவட்டம்,  கிட்டாம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது குளத்துப்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தின் அருகே திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள குளத்தை பொது மக்களே இணைந்து தூர்வார தொடங்கி உள்ளனர். 
    பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த இக்குளம் போதிய மழையின்றி வறண்டு போனது. இதைத் தொடர்ந்து,   ஆக்கிரமிப்புகளால் குளம் என்பதே காணாமல் போனது. 
    50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தின் ஆக்கிரமிப்புகள் மக்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு  அகற்றப்பட்டுள்ள நிலையில்,  தற்போது குளத்தை தூர்வாரும் பணியை  பொதுமக்களே கையில் எடுத்துள்ளனர்.  
    இதற்காக இக்குளத்துக்கு நீர் வரும்  2 ஓடைகள், கெளசிகா நதி ஆகியவற்றை  சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 
    இக்குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிறையும்போது தெக்கலூர், செங்காளிபாளையம், முருகம்பாளையம், சூரிபாளையம், பனப்பாளையம், உப்பிலிபாளையம்,  ஆலாம்பாளையம்,  புதுநல்லூர், சென்னிமலைப்பாளையம்,  ஏரிப்பாளையம்,  காந்தி நகர், கோவிந்தாபுரம், தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஆகிய சுற்றுவட்டார கிராமப்பகுதிகளின் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதிகளில் மீண்டும் விவசாயம் செழிக்கும் என இப்பணியில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 
     இக்குளத்தை  தூர்வாரப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் செலவுத் தொகையை  இப்பகுதி விவசாயிகள் பலர் தாமாக முன்வந்து வழங்கி வருகின்றனர். 
    தற்போது குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கரையானது சுமார் 10 அடிக்கும் மேல் இருப்பதாக அமைக்கப்படுகின்றது. இக்குளத்துக்கு தண்ணீர் வருவதற்கு வசதியாக ஓடையின் அருகில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தை தர முன்வந்துள்ளனர். 
    மேலும்,  பொருட் செலவும், உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த தூர்வாரும் பணிக்கு உதவவேண்டும் என  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமியை, கெளசிகா நதி மற்றும் குளம் பாதுகாப்புக் குழு, தன்னார்வலர்கள் கடந்த மார்ச் 27 ஆம்தேதி  சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
    அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த அவர்,  இக்குளத்தை ஆழப்படுத்தவும்,  தடுப்பணைகள் கட்டவும் அரசிடம் அனுமதிபெற்று உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ளார்.
    அரசின் நிதி உதவியை எதிர்பார்த்திருந்தாலும், அதற்காக காத்திருக்காமல் இந்த பெரும் பணியை பொதுமக்களே தங்களின் நிதியைக் கொண்டு செய்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai