Enable Javscript for better performance
கோவை-பெங்களூரு இடையே கழிப்பிட வசதியுடன் ஃபிளை பேருந்து சேவை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை-பெங்களூரு இடையே கழிப்பிட வசதியுடன் ஃபிளை பேருந்து சேவை தொடக்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவை-பெங்களூரு இடையே  கழிப்பிட வசதியுடன் கூடிய ஃபிளை பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
     கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பெங்களூருவில் இருந்து மைசூரு, குண்டபுரா, மெர்கரா உள்ளிட்ட பகுதிகளுக்கு கழிவறையுடன் கூடிய ஃபிளை பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு ஃபிளை பேருந்து சேவை மார்ச் 30-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கெனவே  அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கோவை காந்திபுரத்தில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேருந்து சேவையை வட்டார போக்குவரத்து அலுவலர் (மத்தியம்)  உதயகுமார் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
      இந்தப் பேருந்தானது காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணி அளவில் சேலம் புறவழிச்சாலை சென்றடையும். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு  இரவு 7.45 மணி அளவில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.  அதே போல், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணி அளவில் காந்திபுரம் வந்தடையும். இந்தப் பேருந்தில் மொத்தமாக 49 இருக்கைகள்,  குளிர்சாதன வசதி, செமி ஸ்லீப்பர் மற்றும் விமானத்தில் உள்ளது போன்ற  நவீன கழிவறையும் (பயோ கழிவறை)  உள்ளது.  
    இந்தப் பேருந்தில் பயணக் கட்டணமாக  ரூ.1,100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில், போக்குவரத்து ஆய்வாளர் ஏ.அப்சல் கான், சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.சண்முகம், கர்நாடக போக்குவரத்துக்கழக கோவை கிளை மேலாளர் ரவி, கோவை  ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் எம்.ஜமீல் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு 0422-2523032, 0422-2523032 அல்லது 94890-55100 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai