Enable Javscript for better performance
கோவை  விமான நிலையத்தில் கலாசார பாரம்பரியச் சின்னங்கள் அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை  விமான நிலையத்தில் கலாசார பாரம்பரியச் சின்னங்கள் அமைப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழர்களின் கலாசார அடையாளங்களைப் பறைச்சாற்றும் வகையில் கோவை சர்வதேச விமான நிலையத்தில் பாரம்பரிய சின்னம் மற்றும் பொம்மைகள் நிறுவப்பட்டுள்ளன.
     கோவை விமான நிலையத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டது.  இதையடுத்து,  விமான நிலைய விரிவாக்கப் பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
    பயணிகள் வசதியைக் கருத்தில் கொண்டு விமானப் போக்குவரத்து ஆணையம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பில் விமான நிலைய வெளிப்புறக் கூரையை சீரமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  
     மேலும் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு விமான நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு விமானச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்துக்கும் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
    இந்நிலையில்,  கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் தமிழர்களின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய சின்னங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.  இதற்காக ரூ. 52 லட்சம் செலவில் தமிழ்நாடு கைத்திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் விற்பனையகம் மூலம் முதல்கட்டமாக ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலைகள்,  அலங்கரிக்கப்பட்ட குதிரை ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. கோவை சுற்றியுள்ள மலைகளில் காணப்படும் யானைகளை காட்சிப்படுத்தும் வகையில் பைபர்களால் உருவாக்கப்பட்ட  யானைகள்,  வரையாடுகள் மற்றும் காங்கயம் காளைகள் நிறுவப்பட்டுள்ளன. 
     இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் கூறியதாவது:
     தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைச்சாற்றும் வகையில் பாரம்பரிய சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விமான நிலையத்துக்கு வரும் வெளிநாடு மற்றும் வெளி மாநில பயணிகள் தமிழர்களின் கலாசாரம் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.  தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்,  தாத்தா, பாட்டி பொம்மைகள் ஆகியவையும் நிறுவப்பட உள்ளன என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai