Enable Javscript for better performance
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் தொடக்கம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைப்பு மையம் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018 வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. 
    மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியன சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களின் படைப்புத் திறனை வெளிப்படும் வகையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்ற 36 மணி நேர தொடர் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், இந்தியாவில் 28 மையங்களில் இருந்து 10,800 மாணவர்கள் பங்கேற்றனர்.
     இந்த நிகழ்ச்சியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்து பேசியதாவது:
      பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் மாணவர்களின் சிந்தனைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாதாரண இந்தியக் குடிமகன்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொறியியல் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    கடந்த ஆண்டு மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட நிலையில்,  நிகழாண்டு வன்பொருள் (ஹார்டுவேர்) தொழில்நுட்பங்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. 
    மாணவர்களின் சிந்தனைகளை புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி ஒருங்கிணைப்பது அவசியம். பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் தொலைதொடர்புத் துறை அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018 இளைய தலைமுறையினருக்கு விடுக்கப்பட்ட புதிய சிந்தனைகளுக்கான எடுத்துக்காட்டாக அமையும் என்றார். 
     தொடக்க விழாவில் பெங்களூரு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வியியல் கூட்டமைப்பு (ஏஐசிடிஇ) அனில் சகஸ்ரபுத்தே பேசுகையில்,  2017-ஆம் ஆண்டு ஹேக்கத்தான் போட்டியின் வாயிலாக 10,000 மாணவர்கள் 27 மத்திய அமைச்சகங்களில் 340 தொழில்நுட்பத் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டுள்ளனர்.  தற்போதைய ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் உலகின் மிகப்பெரிய ஹேக்கத்தான் நிகழ்வாக இருப்பதுடன், மிகப்பெரிய வெற்றியை தொழில்நுட்பத் துணையுடன் அடைந்துள்ளது. நமது மாணவர்கள் நாட்டின் தேவைகளுக்கு உண்டான தீர்வுகளை மட்டும் காண்பதுடன்,  உலகளாவிய தேவைகளுக்காகவும் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
      கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கல்லூரி நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தொடங்கிவைத்தார். இதில்,  அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணை இயக்குநர் கிரிதரிலால் கார்க், காக்னிசென்ட் நிறுவனத்தின் வளர்ச்சித் துறை தலைவர் மாயா ஸ்ரீ குமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி முதன்மை நிர்வாக அறங்காவலர் சுந்தரராமன், முதல்வர் ஜேனட் ,  பேராசிரியர்கள், மாணவர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai