Enable Javscript for better performance
அமமுக நிர்வாகிகள் மீது மர்ம கும்பல் தாக்குதல்:8 பேர் காயம்; 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    அமமுக நிர்வாகிகள் மீது மர்ம கும்பல் தாக்குதல்: 8 பேர் காயம்; 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை வடவள்ளி அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் பெண் நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.  10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. நிர்வாகிகள் மீதும் கார்கள் மீதும் தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யக் கோரி அமமுக.வினர் இரவில் நடத்திய சாலை மறியலால் வடவள்ளியில் பதற்றமான சூழல் நிலவியது.
    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. உக்கடம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து வடவள்ளி பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தொண்டாமுத்தூர் லட்சுமி நகரில் உள்ள பகுதிச் செயலர் கருப்பசாமியின் வீட்டில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
     இந்தக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கூட்டம் முடிவடைந்ததும் அமைப்பின் கோவை மாநகர தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை, புறநகர் மாவட்டச் செயலரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரோகிணி (எ) கிருஷ்ணகுமார், அமைப்புச் செயலர் கே.ஜி.சண்முகம், மகளிரணிச் செயலர் அன்னம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், 20-க்கும் மேற்பட்ட கார்களில் வடவள்ளி வழியாக மாநகருக்கு வந்து 
    கொண்டிருந்தனர்.
     அப்போது வடவள்ளி காவல் நிலையம் அருகே திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடங்கிய ஒரு கும்பல், அமமுக நிர்வாகிகள் வந்த கார்கள் மீது கற்கள், தடிகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், காரில் வந்த நிர்வாகிகள் மீதும், கார்களின் ஓட்டுநர்கள் மீதும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
     இதனால் காரில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி தப்பியோடினர். 
    இதையடுத்து கண்ணாடிகளை உடைத்தும், தடிகளால் அடித்தும் 10-க்கும் மேற்பட்ட கார்களை சேதப்படுத்திய 
    அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. 
    இதில் மகளிரணி நிர்வாகி உள்ளிட்ட 8 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. 
    60 பேர் கைது: இதையடுத்து அப்பகுதியில் அமமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் கோவை - மருதமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இரு சாலைகளையும் மறித்து போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற வடவள்ளி போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  ஆனால், தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், அவர்களைத் தூண்டிவிட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதால் இரவு 11 மணிக்குப் பிறகும் மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை போலீஸார் கைது செய்து செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai