Enable Javscript for better performance
முதல்வரின் அறிவிப்பால் கோவைக்கு விமானப் போக்குவரத்து அதிகரிக்கும்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் அறிவிப்பால் கோவைக்கு விமானப் போக்குவரத்து அதிகரிக்கும்

    By DIN  |   Published on : 18th May 2018 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை விமான நிலையத்தில் இரவு தங்கிச் செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் வரிச்சலுகை வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு காரணமாக விமானப் போக்குவரத்து சேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 
    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 22 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த விமான நிலையத்துக்கு நாள்தோறும் சராசரியாக 36 விமானங்களின் வருகையும், 36 விமானங்களின் புறப்பாடும் நிகழ்கிறது.  இதில், ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட்,  அலையன்ஸ் ஏர், ஜெட் ஏர்வேஸ், ஜெட் கனெக்ட் என 6 விமான நிறுவனங்களின் சார்பில் சென்னை, மும்பை, புதுதில்லி  ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஏர்அரேபியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சில்க் ஏர், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் கொழும்பு, ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
     ஆனால் அதிக அளவிலான விமானப் போக்குவரத்து இருந்தும் கோவையில் ஒரு விமானத்தை  நிறுத்துவதற்குகூட இந்த நிறுவனங்கள் முன்வரவில்லை. இதற்கு முக்கியக் காரனம் எரிபொருள் வரியும் ஒன்றாகும். இதனால், சென்னை, தில்லி ஆகிய நகரங்களுக்கு இரவு மற்றும் அதிகாலையில் விமானப் போக்குவரத்து இல்லை. இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிவந்தனர். 
    இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இரவு தங்கிச் செல்லும் விமானங்களுக்கு அரசு எரிபொருள் வரிச்சலுகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅறிவித்துள்ளார். இதனிடையே, இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் ஜூன் 15-ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் விமானம் கோவையில் நிறுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. பின்னர் கோவையில் இருந்து அதிகாலை 5.30 மணி அளவில் சென்னைக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே மற்ற நிறுவனங்களும் கோவையில் விமானங்களை இரவு நிறுத்துவது குறித்து ஆலோசித்து வந்தன. இந்த நிலையில், முதல்வரின் வரிச்சலுகை அறிவிப்பு அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
    இதன் மூலமாக கோவையில் சுமார் 5 விமானங்கள் வரையில் தங்கிச் செல்ல வாய்ப்பு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சென்னை தவிர மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற விமான நிலையங்களிலும் இரவு தங்கும் விமானங்களுக்கு எரிபொருள் சலுகை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
     நில ஆர்ஜிதப் பணிகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கவில்லை:  கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்று மாநில அரசு சார்பில் 2010-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்து  8 ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே நிதி ஒதுக்கீடு செய்து நில ஆர்ஜிதப்பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே  விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். அதே வேளையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக  சுமார் ரூ. 1,000 கோடி நிதியை கையில் வைத்துக் கொண்டு விமான நிலைய ஆணையக அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 
    ஆகவே மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து நில ஆர்ஜிதப் பணிகளை முடித்துக் கொடுத்தால் கட்டமைப்பு பணிகளை அதிகாரிகள் விரைவில் மேற்கொள்வர். இதன் மூலமாக கோவையில் அதிக அளவு விமானங்களை இரவு நேரங்களில் நிறுத்த முடியும். மேலும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அதிக அளவு விமானங்களை கோவைக்கு இயக்கவும் முன்வரும். இதுவே கோவையில் உள்ள தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai