நாய்கள் ஆட்டைக் கடித்ததால் மனவேதனை: சார் ஆட்சியர் அலுவலகத்தில் கதறி அழுத விவசாயி

நாய்கள் கடித்த ஆட்டுடன் வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி கதறி அழுதது பார்ப்பவர்கள் மனதை வேதனையடைய செய்தது.

நாய்கள் கடித்த ஆட்டுடன் வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி கதறி அழுதது பார்ப்பவர்கள் மனதை வேதனையடைய செய்தது.
பொள்ளாச்சி அருகே உள்ளது அனுப்பர்பாளையம் கிராமம். இந்தக் கிராமத்தை ஒட்டிய சாலையோரப் பகுதிகளில் கேரள மற்றும் தமிழக பகுதிகளைச் சேர்ந்த மாமிசக் கழிவுகள் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி செல்வதாக புகார் இருந்து வருகிறது. இந்த இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக நாய்கள் கூட்டமாக வந்து செல்வதுடன் அருகிலுள்ள விவசாயத் தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருக்கும் ஆடுகள், கோழிகள், மாடுகளை கடித்துச் செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
இதுவரை அனுப்பர்பாளையம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் 10 க்கும் அதிகமான ஆடுகள் நாய்கள் கடித்து இறந்து உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுதவிர, நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளையும் நாய்கள் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனுப்பர்பாளையம் பகுதியில் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக வந்த நாய்கள் கூட்டம் கடித்துக் குதறி உள்ளது. இதில் படுகாயமடைந்த ஆட்டை அதன் உரிமையாளர் விவசாயி சந்தானம் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அந்த ஆடு பிழைக்காது என்று கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மனமுடைந்த விவசாயி சந்தானம் அந்த ஆட்டை பிடித்துக்கொண்டு பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு அதிகாரிகள் முறையான பதில் தராமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து பொள்ளாச்சி சார்  ஆட்சியர் அலுவலகம் முன்பு நாய்கள் கடித்து குதறிய ஆட்டுடன் வந்து அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார் விவசாயி சந்தானம்.
விவசாயி சந்தானம்கூறுகையில்,  அனுப்பர்பாளையம் பகுதியில் சாலையோரங்களில் மூட்டை மூட்டையாக இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் என எங்கு புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வடக்கு ஒன்றிய அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கின்றனர். ஆடு,கோழி, மாடு வளர்ப்பு போன்றவற்றை வைத்துதான் ஜீவனம் செய்து வருகிறோம். ஆனால் அது போன்ற வீட்டு விலங்குகளையும் இறைச்சிக் கழிவுகளை உண்ணவரும் நாய்கள் கடித்து கொல்வதால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com