காவல் துறை அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

காவல் துறை அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என

காவல் துறை அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.மா.மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெ.சத்தியேந்திரன், ரா.அற்புதவேல், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், உ.தனியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், காவல் துறை கூடுதல் இயக்குநர் மு.ரவி, மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண், மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவர் கு.பெரியய்யா, சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்துக்கு 1982ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அங்கீகாரம் வழங்கியுள்ளார். காவல் துறையின் ஒரு கண் களப்பணியாளர்கள் என்றால், மற்றொரு கண் அமைச்சுப் பணியாளர்கள். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் அமைச்சுப் பணியாளர்களுக்கென புதிய பதவி உயர்வுக் கோட்பாடு வகுக்கப்பட்டு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. காவல் துறையில் அதிகபட்சமாக 16 சதவீதம் அளவுக்கு பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்குப் பரிசு வழங்கும் திட்டம், கல்வி உதவித் தொகை உயர்வு, 50 சதவீத மானியத்தில் அத்தியாவசியப் பொருள்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
எத்தனை பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்று, உயர்த்தப்பட்ட புதிய விகிதங்களும், ஓய்வுகாலப் பயன்களும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஊதிய விகிதங்கள் தொடர்பான அரசு ஊழியர்களின் மனக்குறைகளை அதற்காக அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.
இதற்கிடையே, கூடுதல் நிர்வாகப் பணிச்சுமைக்கு ஏற்ப அமைச்சுப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கணினி விவரப் பதிவாளர் பதவியில் இருப்பவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணிமாற்றம், ஊக்கத் தொகை உயர்வு, சென்னையில் சங்கக் கட்டடம் கட்ட நிலம், கருணை அடிப்படையில் பணி நியமனம் போன்ற கோரிக்கைகளையும் தெரிவித்துள்ளீர்கள். இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார்.
இவ்விழாவில், அமைச்சுப் பணியாளர் சங்க நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள், பல்வேறு அரசு அலுவலர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com