கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகள், பழங்கள் அனுப்பும் வசதி தொடக்கம்

கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகள், பழங்களை அனுப்பும் வசதி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகள், பழங்களை அனுப்பும் வசதி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
 தொழில் நகரமான கோவையில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள், இயந்திர உதிரி பாகங்கள், மின்னணு சாதனங்கள், ஜவுளித் தொழில் தொடர்பான இயந்திரங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஏர் கார்கோ எனப்படும் விமானச் சரக்ககம் மூலமாக ஏற்கெனவே அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்கள் யாவும் கோவை விமான நிலைய சரக்ககத்தில் பெறப்பட்டு அங்கிருந்து கொச்சி, சென்னை, பெங்களூரு விமான நிலையங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
 ஆனால் இந்த முறையில் காய்கறி, பழங்கள் போன்ற எளிதில் அழுகக் கூடிய பொருள்களைக் கொண்டுச் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் கோவை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண் விளை பொருள் ஏற்றுமதியாளர்கள் தங்களது பொருள்களை வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை இருந்து வந்தது.
 இந்த நிலையில், விமானச் சரக்ககம் மூலம் காய்கறி, பழங்களை சோதனை முறையில் அனுப்பும் நிகழ்ச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அதன்படி ஒரு கன்டெய்னர் லாரியில் சுமார் 2.50 டன் எடையுள்ள வாழைப் பழங்கள், வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அனுப்பப்பட்டன.
 இந்த முயற்சி வெற்றி பெற்றிருப்பதாகவும் இனி வாரம்தோறும் 5 லாரிகளில் இதுபோன்ற எளிதில் அழுகக் கூடிய பொருள்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும், கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால் விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும் கோவையில் இருந்தே பொருள்களை அனுப்ப விரும்புவார்கள் எனவும் விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 கோவையில் இருந்து சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) இலங்கை போன்ற நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமானப் போக்குவரத்து சேவை இருக்கும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் பொருள்கள் யாவும், கோவையில் பெறப்பட்டு பின்னர் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com