ஜி.எஸ்.டி.யில் உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறுவதில் காலதாமதம்: ஜி.எஸ்.டி. உறுப்பினரிடம் தொழில் அமைப்புகள் முறையீடு

சரக்கு, சேவை வரி விதிப்பு முறையில் உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும்

சரக்கு, சேவை வரி விதிப்பு முறையில் உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், இதை சரி செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி. உறுப்பினரிடம் கோவை தொழில் அமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 ஜி.எஸ்.டி.யில் கோவை தொழில் அமைப்புகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தை கோவை கொடிசியா வளாகத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் வியாழக்கிழமை நடத்தியது.
 ஜி.எஸ்.டி. உறுப்பினர் மகேந்தர் சிங் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், கொடிசியா, சீமா, தங்க நகை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 இந்தக் கூட்டத்தில், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பேசும்போது, ஜி.எஸ்.டி.யால் கோவையில் செயல்பட்டு வரும் ஏராளமான குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளன. உள்ளீட்டு வரிப் பயன்களை திரும்பப் பெறுவதில் தொடர்ந்து காலதாமதம் செய்யப்படுகிறது. பம்ப்செட் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான மூலப் பொருள்களை 18 சதவீத வரியில் வாங்கி, உற்பத்தி செய்த பொருள்களை 12 சதவீத வரிக்கு விற்பனை செய்கின்றனர். இவர்களுக்கு மட்டுமே பல கோடி ரூபாய் உள்ளீட்டு வரியை திரும்ப அளிக்க வேண்டியுள்ளது.
 தொடர்ந்து சுமார் 4 மாதங்கள் வரையிலும் இவர்களுக்கான பயன்களை வழங்காததால் அவர்கள் தங்களின் தொழில்களுக்கு முதலீடு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன், கோவையில் பெரும்பாலான குறுந்தொழில் கூடங்கள் ஜாப் ஒர்க்கில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜவுளித் தொழில்களில் ஜாப் ஒர்க்கில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும் நிலையில், உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டும் 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் ஜாப் ஒர்க் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அனைவருக்கும் ஒரே மாதிரியாக 5 சதவீத வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும்.
 வரிப் பயன்களைத் திரும்பப் பெறும் முறையை எளிதாக்குவதற்காக கோவையில் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும். மேலும், இ-வே பில் நடைமுறைகளை மேலும் எளிதாக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இறுதியில் அவர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசிய ஜி.எஸ்.டி. அதிகாரிகள், தொழில் அமைப்புகளின் கோரிக்கைகள் குறித்து தில்லியில் உள்ள அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com