பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கிறது அரசு
By DIN | Published On : 04th April 2019 06:29 AM | Last Updated : 04th April 2019 06:29 AM | அ+அ அ- |

பாலியல் வன்கொடுமைகளை அரசு வேடிக்கை பார்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
கோவை அருகே பன்னிமடையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு வந்த அவர், சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 6 மாதங்களாகவே கோவை மாவட்டத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது. குறிப்பாக பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் தமிழகத்துக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்குக்கூட இப்போது பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. அரசும், காவல் துறையும் இப்பிரச்னைகளை அலட்சியமாகக் கையாளுகின்றன. இப்பகுதியில் போதைப் பொருள்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளதால் இளைஞர்கள் இதற்கு அடிமையாக உள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறை அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. கூட்டு பலாத்காரம் என்று சிறுமியின் பிரேதப் பரிசோதனையின்போது தெரிவித்த காவல் துறையினர் இதில் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் கைது செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டும். சிறுமியின் பெற்றோருக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கவேண்டும் என்றார்.
கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், ஒன்றியச் செயலாளர் என்.பாலமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கேசவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.